June 21, 2013

அருணாசல அற்புதம் 3: “எனக்கு ஒரே ஒரு ருசி”


ஒருமுறை ஔவைப் பாட்டி வழுதி என்பவன் திருமணத்துக்குப் போயிருந்தாளாம். அவன் தமிழில் மிகத் தேர்ந்தவன். அங்கே நடந்த விருந்தில் அவள் எவையெல்லாம் உண்டாளாம் தெரியுமா? எல்லாப்புறமும் பலரால் நெருக்குண்டாளாம், பிடித்துத் தள்ளுண்டாளாம். கூட்டத்தைத் தாண்டி அவளால் உணவுக் கூடத்துக்குள் நுழையே முடியவில்லை. மிகவும் நேரமாகிப் போகவே பசி அதிகமாகி, உடல் வாடிப் போயிற்றாம்!

வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்(து)
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் – அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே
சுருக்குண்டேன் சோறுண் டிலேன்.

ஆனால் குமரகுருபரர் சொல்கிறார், யாரொருவர் இந்த உலக வாழ்க்கையிலே மொத்துண்ண, அதாவது இடிபட, விரும்பவில்லையோ, அவர்கள் பைத்தியக்காரன் சாப்பிடுவதைப் போல சாப்பிடுவாராம். பைத்தியக்காரன் எப்படிச் சாப்பிடுவான்? முதலில் அவனுக்கென்று ஏதும் விருப்பம் கிடையாது. விரும்பினாலும் கொடுப்பார் கிடையாது. அப்படியே தவறிப்போய் யாரேனும் சுவையான பண்டங்களை அவன் முன்னால் வைத்தாலும் அதில் கவனம் செலுத்தாமல், தன் கையில் என்ன எடுக்கிறோம், வாயில் என்ன போகிறது, அது எப்படிச் சுவையாக இருக்கிறது என்பவற்றை அறியாமல் சாப்பிடுவான்.

துயிற்சுவையும் தூநல்லார் தோட்சுவையும் எல்லாம்
அயிற்சுவையின் ஆகுவ என்றெண்ணி - அயிற்சுவையும்
பித்துணாக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பி னவர். (நீதிநெறிவிளக்கம் - 85)

நன்கு சாப்பிட்டால் தூக்கம் ரொம்ப சுவாரசியமாக வரும். சாப்பிடும் உணவிலேயே காம உணர்ச்சியைத் தூண்டும் பொருள்களும் உள்ளன. இதைப் புரிந்துகொண்டதனால், எவனொருவன் எல்லோரையும் போல உலக வாழ்க்கையில் அடிபட விரும்பவில்லையோ, அவன் பைத்தியக்காரனைப் போல, உணவில் சிறிதும் அக்கறை காட்டாமல் சாப்பிடுவானாம்!

ஔவையார் சாப்பிடப் போய் உலகோரிடையே இடிபட்டார். குமரகுருபரரோ சாப்பிட்டுவிட்டு அதனால் உலக வாழ்க்கையில் அடிபட மாட்டேன் என்கிறார்.

ஒரு பித்தனுக்கோ கவனித்துச் சோறு போட யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு ஞானிக்கு அப்படியல்ல. ஸ்ரீ ரமண மகரிஷிகளுக்குப் பலபேர் பல பொருட்களைக் கொண்டு வருவார்கள். பக்தர்கள் கொண்டுவரும் உணவுப் பண்டங்களை எல்லாம் பழனி சுவாமி ஒன்றாகக் கலப்பார். ஒரு கவளம் அதில் ரமணருக்குக் கொடுப்பார். அவ்வளவுதான். மீதியிருப்பது மற்றவர்களுக்குப் பிரசாதமாகத் தரப்படும். இறுதிவரையில் ரமணர் குழம்பு, ரசம், காய், பாயசம் என்று தனித்தனியே உணவு உண்டதில்லை.

இந்தச் சமயத்தில் தேவராஜ முதலியார் சொல்லும் ஒரு சம்பவம் நினைவுகூரத் தக்கது. ரமணாச்ரமம் ஏற்பட்டுவிட்ட சமயம். போஸ் என்ற பக்தரின் தாயார் பலவித உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டு வந்து உணவு வேளையின் போது பகவானுக்கும் பக்தர்களுக்கும் பரிமாறினார். வழக்கம்போல ரமணர் ஒவ்வொன்றிலும் சிறிது, சிறிது எடுத்துக் கலந்து சாப்பிட்டார். போஸ் வங்காளி ஆதலால் தேவராஜ முதலியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொல்லிவிட்டு ரமணர் இவ்வாறு கூறினார், "இனிமேல் இப்படிச் சிரமப்பட்டு வகைவகையாக உணவு தயாரித்துக் கொண்டு வரவேண்டாம் என்று அந்த அம்மாவிடம் சொல்லுங்கள். உங்கள் எல்லோருக்கும் பலவிதமான ருசிகள் உள்ளன; எனக்கோ ஒரே ஒரு ருசிதான். உங்களுக்குப் 'பலவற்றில்' ருசி; எனக்கு எப்போதும் 'ஒன்றில்'தான் ருசி. நான் எல்லாவற்றையும் கலந்து ஒன்று சேர்த்துச் சாப்பிடுகிறேன் என்பதையும் கவனித்திருப்பீர்கள்."

நாமெல்லாம் ஞானிகள் அல்ல. அதற்காக, நாவின் ருசியே குறியாக அலையவேண்டியதும் இல்லை. இப்போது மிகச் சிறிய வயதிலேயே குழந்தைகள் வயதுக்கு மீறிய வளர்ச்சியும், எடையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெற்றோரும் தம் குழந்தைகள் எத்தனைக்கெத்தனை நிறையச் சாப்பிடுகிறார்களோ அத்தனைக்கதனை ஆரோக்கியம் என்று நினைத்துவிடுகிறார்கள். போதாக்குறைக்கு உடல் உழைப்புக் கிடையாது. அரை கிலோ மீட்டர் நடப்பதென்றாலும் ஏதோ ஒரு வாகனத்தைத் தேடுகிறோம். அளவுக்கதிகமான உடல் பருமன் சிறு வயதிலேயே சர்க்கரை நோய், இதய நோய், நீங்காத சோர்வு, புத்தி மந்தம் போன்ற பலவகைச் சிக்கல்களில் கொண்டுபோய் விடுகிறது. மற்றவர்கள் கேலி செய்வதால் ஏற்படும் மனவியல் ரீதியான சிக்கல்கள் வேறு.

அரை வயிற்றுக்கு உணவு, கால்வயிறு நீர் உட்கொள்ள வேண்டும் என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள். மீதி கால்வயிறு காலியாக இருக்க வேண்டும். நம்முடைய இரைப்பை சுருங்கி விரிவதன் மூலம்தான் உணவு செரிக்கிறது. அது சுருங்கவே முடியாமல் தலையணையில் பஞ்சு அடைப்பது போல உணவை அடைத்துவிட்டால்.....!

வயது ஏற ஏற, பிற சுவைகளைக் குறைத்துக் கொண்டே வந்து ஒரே சுவை, அதாவது இறைவனின் அழகிய வடிவத்தின் சுவை, அவனுடைய திகட்டாத திருப்பெயரின் மீது சுவை என்று மாறிவிட்டால், வாழ்க்கை அதிகம் சுவைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

(தொடரும்)

- Impress Magazine இதழில் எழுதிவரும் தொடரிலிருந்து....
Post a Comment