December 06, 2013

அருணாசல அற்புதம் 6: அகத்தில் உள்ளது சுகம்

அறிவியல் வளர்ந்த வரலாற்றைப் படித்தால், இறவா மருந்தையும் (காயகற்பம், Elixir of life), இரும்பு போன்ற கீழ்நிலை உலோகங்களைப் பொன்னாக்கும் வழியையும் (ரசவாதம், Alchemy) கண்டுபிடிக்கும் முயற்சிகளில்தான் மருத்துவம், வேதியியல் போன்றவை வளர்ந்தன என்று பார்க்கிறோம். எல்லா நோய்களையும் குணமாக்கும் 'சர்வரோக நிவாரணி’ (panacea) ஒன்று உண்டு என்றுகூட மனிதன் நம்பி அதைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைச் செய்ததுண்டு. இவையெல்லாம் வெளிப்புறமான, உலகாயதமான வழிகள். மிக நீண்ட வழிகள். இவற்றில் பெற்ற வெற்றிகளால் இன்று மனிதனுக்கு ஆயுள் நீடித்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் சுகவாழ்க்கை கிட்டியிருக்கிறதா என்பது கேள்விக்குறி.


சுகமான, அமைதியான வாழ்க்கை என்பது உடலைமட்டும் பொறுத்ததல்ல. அதனால்தான் நமது சித்தர்கள் சுகவாழ்க்கைக்கு முக்கியம் அகவாழ்க்கை என்பதை உணர்ந்தார்கள். அதன் தரத்தை மேம்படுத்த பிராணாயாமம், யோகம், தியானம் என்னும் அற்புத முறைகளை வகுத்தார்கள். எப்படி ஒரு நதியைக் கடக்கப் படகு ஓட்டை, உடைசல் இல்லாமல் இருக்க வேண்டுமோ, அதுபோல, உலகவாழ்க்கை என்னும் நதியைக் கடந்து ஆன்மீகத்தின் உச்சமாகிய அனுபூதியைப் பெறுவதற்கு உடல்நலம் மிகவும் அவசியம் என்பதால் அவர்கள் உடலை வலுவாக்க ஹடயோகத்தையும் வகுத்தார்கள். பிராணாயாமம், ஹடயோகப் பயிற்சிகளின் வழியே உடலின் உள்ளேயும் வெளியேயும் இரும்புபோல ஆக்க முடியும் என்பதைப் பல ஹடயோகிகள் மருத்துவ உலகுக்கு நிரூபித்துள்ளனர்.

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளை பாரதத்துக்கு அப்பால் உள்ள ஆன்மீக சாதகர்களுக்கு அறியத் தந்தவர் பால் பிரண்டன் என்ற ஆங்கிலேயப் பத்திரிகையாளர். அவர் தனது ‘A Search in Secret India' என்ற நூலில் பிளேடு தின்று அமிலம் குடிக்கும் யோகி, மண்ணுக்குள்ளே மூச்சுக்கூட விடமுடியாமல் புதைந்து வாரக்கணக்கில் உயிரோடு இருக்க வல்ல யோகி, கேட்ட மாத்திரத்தில் அரியவகைப் பழங்களை வரவழைத்துத் தரமுடிந்த யோகி எனப் பலவகைப்பட்ட யோகிகளைச் சந்தித்ததை மிகச் சுவையாக விவரித்திருக்கிறார். இவையெல்லாம் மிகுந்த முயற்சியின் பேரில் அடையப்படும் சக்திகள்தாம். அதேநேரத்தில் இவற்றின் மாயைக்கு மயங்கி மற்றவர்களையும் மயக்கிக் காலம் கழிப்பது முற்றிலும் வீணானது.

இதை உணர்த்தவே ரமண மகரிஷி, கோரக்நாதர் மற்றும் அல்லமர் இடையே நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுவதுண்டு. கோரக்நாதர் கடுமையான ஹடயோகப் பயிற்சிகளின் மூலம் உடலின் குற்றங்களை நீக்கி, வலுப்படுத்தி ஆயிரம் ஆண்டுகள் வாழும் காயசித்தியை அடைந்தார். அது அவருக்குப் பெரும் கர்வத்தைக் கொடுத்தது. அவர் ஞானிகள், புண்ணிய புருஷர்களை அணுகித் தம் உடலைச் சோதிக்கும்படிக் கூறுவார். ஒரு வாளை எடுத்து அவர்மீது வீசினால், அது அவர் உடலில் பட்டதும், ஒரு வெண்கல மணியைப் போல ‘டணார்’ என்று ஒலியெழுப்பிச் சற்று நேரம் ரீங்காரமிட்டு அடங்கும். காயசித்தியை மரணமில்லாப் பெருவாழ்வென்று நினைத்துவிட்ட அவர் அந்தக் கர்வத்தோடு அதே பகுதியில் வாழ்ந்து வந்த அல்லம பிரபு என்ற ஞானியை அணுகினார். அல்லமரை சாட்சாத் ஸ்ரீ சங்கரரின் அவதாரம் என்று கருதியதோடு, மக்கள் பெருமளவில் சென்று பார்த்து ஆனந்தமடைவது கோரக்நாதருக்குத் தெரியவந்தது.

அல்லமரிடம் போய்த் தனது அதிசாமர்த்தியத்தைக் காண்பிக்க ஆவல் கொண்டார் கோரக்நாதர். போய்ப் பார்த்தால், அத்தனை பிரபலமாக இருந்த அல்லம பிரபுவோ மெலிந்து நலிந்த தேகம் கொண்டவராக இருந்தார். கோரக்நாதருக்கு அவரைப் பார்க்க ஏளனமாக இருந்தது. தாம் சிரித்ததோடு உரக்கவே கேலி செய்தும் பேசினார், “ஆஹா! உங்களை எல்லோரும் பெரிய ஞானி, மரணத்தை வென்றவர் என்றல்லவா சொல்கிறார்கள். இந்த வற்றல் உடம்பை வைத்துக்கொண்டு நீங்கள் எங்கே மரணத்துக்குப் பயப்படாமல் இருப்பது! இங்கே என் உடலைப் பாருங்கள். என்ன வலிமை, என்ன உறுதி! எவரும் இதைச் சிதைக்க முடியாது. சந்தேகமிருந்தால் நீங்கள் ஒரு வாளால் வெட்டிப் பாருங்கள். அப்போதுதான் நான் அடைந்துள்ள காயசித்தியின் மகிமை உங்களுக்குப் புரியும்” என்றெல்லாம் சவால் விட்டார்.

“அன்பரே, இவை ஆபத்தான சோதனைகள், நமக்கு வேண்டாம். இவற்றில் எனக்கு ஆர்வமும் இல்லை” என்றார் அல்லமர். விடாமல் கோரக்நாதர் வற்புறுத்தினார். வேறு வழியின்றி அல்லம பிரபு ஒரு கத்தியை எடுத்து கோரக்நாதரின் உடலில் பாய்ச்சினார். அந்தக் கத்தி அவரது உடலுக்குள் நுழையவே இல்லை. மாறாக, ஒரு உலோகத்தைத் தாக்கிய அதிர்வு கொண்ட ஒலியை எழுப்பியது, அவ்வளவுதான். அதைக் கண்டு தாம் வியப்புற்றவர் போலப் பேசினார் அல்லம பிரபு, “அன்பரே, நீங்கள் அடைந்துள்ளது மிக அற்புதமான ஆற்றல். நல்லது, நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். எப்படி நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் உங்கள்மீது கத்தி வீசினேனோ, அதேபோல நீங்கள் என்மீது கத்தி வீச வேண்டும். இந்தாருங்கள் வாள்” என்றார்.

‘நானோ பல ஆண்டுகள் பயிற்சியில் காயசித்தி பெற்றவன். இவரோ வற்றல் சாமியார். நாம் கத்தி பாய்ச்சி இவர் இறந்து போனால் வம்பு வரும்’ என்று பயந்தார் கோரக்நாதர். “வேண்டாம் சுவாமி, நீங்கள் கத்தி பட்டால் இறந்து போவீர்கள், நான் செய்யமாட்டேன்” என்று மறுத்தார். “அதனாலென்ன, நான் இறந்து போனால் நஷ்டம் எதுவுமில்லை. அதற்கு உங்களைப் பொறுப்பாளி ஆக்கவும் மாட்டேன்” என்று உறுதியளித்தார் கோரக்நாதர்.

அதற்கு உடன்பட்ட கோரக்நாதர் வாளைக் கையில் வாங்கி அல்லமரின் மீது பாய்ச்சினார். இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக, மேலிருந்து கீழாக என்று பலவகைகளில் வாளை வீசினார். அந்த வாள் எந்தத் தடங்கலும் இல்லாமல் அல்லமரின் உடல் ஏதோ காற்றால் ஆனதுபோலப் போய் வந்ததே அன்றி, அல்லமருக்கு எதுவும் ஆகவில்லை. கோரக்நாதருக்குத் தன் கண்களையே நம்பமுடியவில்லை. “நான் என்ன சாதித்தேன்! இந்த மண்பாண்டம் போன்ற உடலை வச்சிரமாக்கினேன், அவ்வளவுதான். ஆனால் பூஞ்சையாகக் காணும் உங்கள் உடலோ, பௌதிக விதிகளை மீறியிருக்கிறது. நீங்கள் உன்னதமான ஞானநிலையில் இருப்பவர். அருள்கூர்ந்து என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு ஞானப்பாதையைக் காட்டி அருள வேண்டும்” என்று மன்றாடிப் பிரார்த்தித்தார்.

இதைத்தான் தாயுமானவரும் பாடினார்:

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெலாம் கட்டி 
ஆளினும் கடல்மீதினிலே 
ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக 
அம்பொன் மிக வைத்த பேரும் 
நேசித்து ரசவாத வித்தை கலைந்திடுவர் 
நெடுநாள் இருந்த பேரும் 
நிலையாகவே வேயினும் காயகற்பம் தேடி
நெஞ்சு புண்ணாவர் எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் 
உறங்குவதுமாக முடியும் 
உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே 
ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப் 
பாசக்கடற்குள் விழாமல் மனதற்ற 
பரிசுத்த நிலையை அருள்வாய் 
பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற 
பரிபூரண ஆனந்தமே.

இப்போது நான் சொல்ல வருவது ஆசைப்படாதீர்கள் என்றல்ல. அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்குச் செலவிடும் உடல், மனச் சக்திகளின் ஒரு பகுதியையாவது ஆன்மத் தேடலில் செலவிட்டால், நமக்கு நிம்மதியான, ஆனந்தம் நிரம்பிய வாழ்க்கை கிடைக்கும். மன அழுத்தம், கொந்தளிப்பு, கோபதாபம், விருப்பு வெறுப்பு, மனச்சிதைவு என்று பல்வேறு மனரீதியான துன்பங்களுக்கும் நோய்களுக்கும் ஆளாகி, உறக்கம் இழந்து தவிக்க மாட்டோம். நமக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அன்பும் ஆனந்தமும் கொடுப்பவர்களாக வாழ்வோம். இதுதான் மெய்யான ஆன்மீகத்தின் சிறப்பு. இதைச் செய்ய ஆசைப்படுங்கள்.

உங்களைத் தேடி குரு வருவார்.

(தொடரும்)
Post a Comment