May 12, 2004

சுவாமி இருக்கிறார்

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி இது.

அங்கே கோடைக்காலத்தில் தினமும் குடிநீர் நிரப்பிவைக்க ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் காவேரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து பெரிய சால்களில் நிரப்பிவைப்பார். சாலுக்குக் கீழே நல்ல மணல் பரப்புவார். நதியில் நீர் வறண்டுவிட்டாலும், மணற்படுகையில் ஊற்றுத் தோண்டி அதிலிருந்து தண்ணீர் கொண்டுவருவார். அந்தக் காலத்து ரெ·ப்ரிஜிரேஷன் டெக்னிக் அதுதான்.

நீரில் நறுமணம் வருவதற்காக வெட்டிவேர், விளாமிச்சை வேர் இவற்றையும் போட்டு வைப்பார். முந்தைய நாள் நீர் எஞ்சியிருந்தால் அதைக் கொட்டிவிட்டுப் பானையை ("ஓஹோ, 'சால்'னு சொன்னாப் பானையா?") நன்றாகக் கழுவிப் புதுநீர் நிரப்புவார். ஆசாமி கடுகடுப்பானவர்தான் என்றாலும் தன் வேலையைச் சரியாகவே செய்து வந்தார். அவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டவரும் கூட.

நிரப்புவது மட்டுமல்லாமல் கேட்பவர்களுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பதும் அவருடைய வேலையாய் இருந்தது.

அந்தக் கல்லூரியில் புதிதாக ஒரு தத்துவப் பேராசிரியர் வந்து சேர்ந்தார். பெயர் கள்ளிக்கோட்டை நாராயணசாமி ஐயர். ஒருநாள் அவர் தண்ணீர் கேட்க, இவர் எடுத்துக் கொடுத்தார். தண்ணீரில் ஏதோ கெட்ட நாற்றம் வருவதை உணர்ந்தார் கள்ளிக்கோட்டைக்காரர். "என்ன ஐயா, இதிலே ஏதோ நாற்றம் அடிக்கிறதே!" என்றார்.

"நான் என்ன செய்வேன், சுவாமி இருக்கிறார்" என்றார் தண்ணீர் கொடுப்பவர்.

தத்துவ ஆசிரியருக்கு இவர் சொன்னதன் தத்துவம் புரியவில்லை. ஊருக்குப் புதிதாயிற்றே. 'நான் ஒன்று கேட்டால் இந்த வயிற்றுவலிப் பேர்வழி ஏதோ சொல்கிறாரே. தண்ணீரைக் குறை சொன்னால் சுவாமி தண்டிப்பார்' என்று சொல்வது போலிருக்கிறதே என்று நினைத்தார். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. "என்ன ஐயா, தண்ணீர் நாறுகிறது என்றால் சுவாமி இருக்கிறார் என்கிறீர்களே. கொஞ்சம் நல்ல தண்ணீராகக் கொண்டுவந்து நிரப்பக் கூடாதா?" என்று குரலில் கடுமை தோன்றக் கேட்டார்.

"ஏதோ என்னால் ஆனதை நான் செய்கிறேன். சுவாமி இருக்கிறார். என்மேல் என்ன தப்பு?" என்றார் தண்ணீர் சேவைக்காரர் மீண்டும்.

தத்துவப் பேராசிரியருக்குக் கோபம் மேலே ஏறிக்கொண்டே போனது. மறுபடியும் கேட்டாலும், விடாமல் "சுவாமி இருக்கிறார்" என்பதே பதிலாக இருந்தது. தற்செயலாக உ.வே.சா. அங்கே போனார். வாக்குவாதம் முற்றுவதைக் கவனித்துவிட்டு "என்ன சமாச்சாரம்?" என்று கேட்டார்.

"இந்த ஆளை இப்பவே வேலைநீக்கம் செய்யவேண்டும். தண்ணீரில் கெட்ட நாற்றம் ஏன் வருகிறதென்று கேட்டால், சுவாமி இருக்கிறார் என்று பதில் சொல்கிறார்" என்றார் நாராயண சாமி ஐயர் உரத்த குரலில்.

உ.வே.சா.வுக்கு விஷயம் விளங்கிவிட்டது. "கோபித்துக்கொள்ளாதீர்கள். ஆற்றில் தண்ணீர் இல்லை. இவர் ஊற்றுப் போட்டுத் தண்ணீர் கொண்டுவருகிறார். ஊற்றின் அடியில் கும்பி இருக்கிறது. ஆகவேதான் தண்ணீரில் நாற்றம். இந்த ஊர் சுவாமியின் பெயர் கும்பேசுவரர். கும்பி என்பது அவர் பெயரைப் போல் ஒலிக்கிறது என்பதால் சுவாமி என்றே சொல்வது வழக்கம். 'கும்பியிருக்கிறது நான் என்ன செய்யமுடியும்' என்ற கருத்தில்தான் அவர் இப்படிச் சொன்னார். அவர் உங்களை நிந்திக்கவில்லை. தெய்வம் உங்களைத் தண்டிக்கவேண்டும் என்றும் கருதவில்லை" என்று விளக்கினார் உ.வே.சா.

நாராயணசாமி ஐயருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. தண்ணீர் கொடுப்பவரை ஏற இறங்கப் பார்த்தார். "அடப்பாவி! ஈசுவரனுடைய பெயரை இப்படியா உபயோகப்படுத்துவது? இதுதான் நீ சொன்னதன் அர்த்தமா?" என்று சொல்லிச் சிரித்தார்.

"சரிசரி, கும்பி இல்லாத இடமாகப் பார்த்து இனிமேல் நீர் மொண்டு வா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்கள். சரி, கும்பி என்றால் என்ன என்கிறீர்களா? இந்த இடத்தில் நாற்றமடிக்கும் சேறு என்று பொருள். தவிர 'வயிறு' என்றும் பொருளுண்டு. ("கும்பி எரியுது, குடல் கருகுது..." வசனம் கேட்டிருப்பீர்களே).

சுமார் 45 வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை இது என்று உ.வே.சாமிநாதையர் 1939-ல் சொல்கிறார். நூலின் பெயர்: புதியதும் பழையதும். (டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பெசன்ட் நகர், சென்னை 600090, தமிழ்நாடு, இந்தியா.)

சுவாமி இருக்கிறார் போங்கள்!

1 comment:

சுந்தரவடிவேல் said...

//தண்ணீர் கொடுப்பவரை ஏற இறங்கப் பார்த்தார். "அடப்பாவி! ஈசுவரனுடைய பெயரை இப்படியா உபயோகப்படுத்துவது? இதுதான் நீ சொன்னதன் அர்த்தமா?" என்று சொல்லிச் சிரித்தார்.// இந்த வரிகள் என்னை யோசிக்க வைத்துவிட்டன. தத்துவப் பேராசிரியர் அந்தத் தண்ணீர்க்காரரின் புத்தியை மெச்சவுமில்லை, தான் அறியாமல் கடிந்து கொண்டதற்கு வருந்தவுமில்லை. அல்லது அங்கு நடந்தது நம்மிருவருக்கும் தெரியாது. இப்படியாக நீண்டது என் யோசனை!