February 14, 2014

அருணாசல அற்புதம் 7: “ஓ அப்படியா!”



கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் பகவான் ஸ்ரீ ரமணரின் அணுக்கச் சீடராக இருந்தார். அவர் தனது குடும்பத்தில் பல பேரிழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. எப்போதெல்லாம் துயரம் தாங்க முடியாத நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அவர் பகவானிடம் முறையிடுவார். அவர் ஒருமுறை பகவானிடம் கூறினார், “நாங்கள் இத்தகைய இன்னல்களால் துயருறும்போது உங்களிடம் மனத்தாலோ, கடிதம் வாயிலாகவோ முறையிடுகிறோம். அப்போது தாங்கள் எங்கள் நிலைமையை அறிந்து இரக்கத்தால் உந்தப்பட்டு ‘இவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே’ என்று வருந்துவதில்லையா?” என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கு பகவான் சொன்ன பதில் மிக முக்கியமானது. ஒரு ஞானியின் தன்மையைச் சொல்வது. பகவான் கூறினார், “அப்படி ஒருவன் வருந்துவானேயானால் அவன் ஞானி அல்லன்”!

சுகம்-துக்கம், இன்பம்-துன்பம், புகழ்-இகழ் என்று இப்படிப்பட்ட வாழ்க்கையின் இருமைகளுக்கு அப்பாற்பட்டவன் ஞானி என்றால், அவன் எப்படி வருத்தமடைவான்?

இத்தகைய ஒரு கேள்வியை பக்தர் ஒருவர் மாதா ஸ்ரீ அம்ருதானந்தமயி தேவியிடம் கேட்டபோது அவர் கூறினார், “உங்களோடு சேர்ந்து நானும் வருந்துவேனாகில் நான் எப்படி உங்களுக்கு உதவமுடியும்? கீழே விழுந்தவனைத் தூக்கிவிட வேண்டுமானால், தூக்கிவிடுபவன் பலசாலியாக இருக்க வேண்டுமல்லவா?” என்று. அதுதான் உண்மை.

ஞானிகளுக்குக் கருணை, இரக்கம் ஆகியவை உண்டு. அவை அன்பை அடிநாதமாகக் கொண்டவை. அவர்களுடைய அன்பு வேண்டியவர் வேண்டாதவர் என்று பார்க்காத அன்பு. பிரபஞ்சமளாவிய அன்பு. தனக்கென்று வைத்துக்கொள்ளாத அன்பு. “Love gives, gives and forgives; Selfishness gets, gets and forgets" என்று கூறுவார் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா.

அவர்களுக்கெல்லாம் கொடுக்க மட்டுமே தெரியும்.

“நீ கஷ்டப்பட்ட போது நான் உதவினேனே. கொஞ்சமாவது உனக்கு நன்றி இருக்கிறதா? என்னை நீ வந்து பார்ப்பதே இல்லையே. எனக்கு நீ எதுவும் செய்யவே இல்லையே” என்று அவர்கள் பேசமாட்டார்கள். காரணம் என்ன தெரியுமா? எதையுமே அவர்கள் தாம் செய்வதாக நினைப்பதில்லை. தம்மை ஒரு கருவியாகக் கொண்டு இறைவனே செய்கிறான் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்லை, அதுவே உண்மையும்கூட. ஏனென்றால், ரமணர் கூறியதுபோல, “கடவுள் வேறு ஞானி வேறு அல்ல”.

தேவராஜ முதலியார் என்ற அன்பர் தனது ‘தாயும் நீயே தந்தையும் நீயே’ என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்: “எங்களுக்குத் துன்பம் நேரிட்டால் பகவானிடம் (ரமணரிடம்) மனத்திற்குள் முறையிட்டால் நாங்கள் எங்கிருப்பினும் உடனடியாகத் தேவையான உதவி கிடைத்துவிடுகிறது என்பதை நானும் பக்தர்களும் நன்றாக அறிந்துள்ளோம். ஒரு நெடுநாளைய பக்தர் தாம் பகவானிடம் போனமுறை வந்து சென்ற பின்னர் தமக்கேற்பட்ட பல இன்னல்களைப்பற்றி பகவானிடம் கூறுகிறார். பகவானும் அவர் கூறுவதைப் பொறுமையோடு கேட்பதோடல்லாமல், இடையில் ‘ஓ அப்படியா?’ என்று ஏதாவது கூறவும் செய்கிறார்.”

இங்கே ‘ஓ அப்படியா?’ என்பதைப்பற்றிக் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நம்மிடம் யாராவது வந்து நமக்குத் தெரியாததைக் கூறினால் நாம் ‘ஓ அப்படியா? என்று கேட்போம். ஆனால் இங்கேயோ, பகவானிடம் தனது துன்பத்தை முறையிட்டு பகவானே தீர்த்துவைத்ததாக ஒருவர் கூறும்போது ‘ஓ அப்படியா?’ என்று சொல்வது பொருந்தவில்லையே என்று நினைக்கலாம். இதற்கும் விடையை தேவராஜ முதலியாரே கூறுகிறார்.

“பகவான் பாசாங்கு செய்ய மாட்டார். பக்தர்கள் துயரத்தில் முறையிடும்போது அவர்களுக்குக் கிடைக்கும் உதவியைக் குறித்து, “ஆம், தானாகவே அப்படி நடக்கும்” என்று கூறினார்” என்று முடிக்கிறார் முதலியார். இதில் மறைந்திருக்கும் உண்மை என்னவென்றால், “கடவுள் வேறு ஞானி வேறு அல்ல” என்பதுதான். ஒரு முழுமையான ஞானியிடம் ஓர் அன்பர் முறையிட்டால், அதை நிவர்த்திக்கத் தெய்வம் நேரடியாக, உடனடியாகச் செயலில் இறங்குகிறது. அப்படி தெய்வம் தானே நேரடியாக உதவி செய்துவிடும் என்ற உண்மை ஞானிக்குத் தெரியும். ஆனாலும் எவருக்கு எப்போதெல்லாம் என்ன நடந்திருக்கிறது என்பதை (அறியும் சக்தி இருந்தாலும்) அவற்றையெல்லாம் அறிந்து வைத்துக்கொள்ள ஞானி முற்படுவதில்லை.

ஒரு சராசரி ஆன்மீகத் தரகராக இருந்தால், “ஆமாம், நான்தான் உனக்காகக் கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். பார்த்தாயா, நான் சொன்னால் கடவுள் கேட்பார். கொண்டா காணிக்கையை” என்று பிடுங்கிவிடுவார். ஆனால் ஞானியரோ இத்தகைய உலகியல் லாபங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். லாபம்-நஷ்டம், இன்பம்-துன்பம், பெருமை-சிறுமை, புகழ்-இகழ் போன்றவை அவர்களைத் தீண்டுவதில்லை.

நாம் சராசரி மனிதர்கள். இவற்றை அறிவதால் நமக்கு என்ன பயன்?

நாமும் பிறர் துன்பங்களை அறிய வருகிறோம், அவர்களோடு சேர்ந்து நாமும் துயரப்படுகிறோம். ஆனால், உண்மை என்னவென்றால், வருத்தம் யாருக்கும் பயன் தருவதில்லை. ‘என்னால் என்ன செய்ய முடியும், நானே பலமற்றவன்” என்று நினைத்துவிடுகிறோம். ஆனால், விவேகானந்தர் கூறியது போல, “பலமே உயிர்வாழ்க்கை; பலவீனமே மரணம்”.

நாம் பலவீனர்களல்ல. உடல்பலம், பணபலம், ஆள்பலம். பதவிபலம் என்று பலவகை பலங்கள் இருக்கலாம். இவற்றால் நீங்கள் ஓரளவு உதவமுடியும், மனோபலம் இருந்தால்.

ஆனால், இந்தியனாகப் பிறந்த ஒவ்வொருவரின் மிகப்பெரிய பாரம்பரியச் சொத்து ஆன்மபலம். அதை அசட்டை செய்துவிட்டோம். அப்படி ஒன்று இல்லை அல்லது அது நமக்குத் தேவையில்லை என்று எண்ணிவிட்டோம். நமது ஆத்மபலத்தை நாமே உணர்வது எப்படி? அதன்மூலமாக நமக்கும் உலகுக்கும் நன்மை செய்வது எப்படி?

இந்த அறிவை நமக்கு மீட்டுத் தரவே பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா, ரமண மகரிஷிகள், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், மாதா அமிர்தானந்தமயி தேவி என்று பல அவதாரங்களும், ஞானிகளும், மகான்களும் பாரதமெங்கும் தோன்றி வாழ்ந்தார்கள், வாழ்கிறார்கள்.

அவர்களைத் துணையாகக் கொண்டால், அவர்களின் கையைப் பிடித்து சரியான வழியில் நடந்தால், மீண்டும் நம்நாடு ஆன்மீக, உலகியல் சிகரங்களை எட்ட நாம் உதவ முடியும். அதன்மூலம் உலகத்தை சொர்க்கமாக்க முடியும். நம்பிக்கை கொள்ளுங்கள், கதவு திறக்கும், வழி தெரியும், வெளிச்சம் விரியும். அந்த வெளிச்சமாக நீங்களே இருக்கக்கூடும்.

1 comment:

திவாண்ணா said...

அருமையான பதிவு!