February 26, 2017

ரமண சரிதம்: பால் பிரண்டன்



பகலுணவுக்குப் பின் மீண்டும் அறைக்கு வந்தனர். முதல் அனுபவத்தின் உயரத்திலிருந்து சற்றே கீழே இறங்கி வந்திருந்த பால் பிரண்டன் கேள்வி கேட்டார்:

பால்: எனக்கு ஞான அனுபவம் வேண்டும். நீங்கள் உதவி செய்வீர்களா? இல்லை தன்னைத் தேடுவது ஒரு மாயைதானா?

பகவான்: 'நான்' என்று சொல்கிறீர்கள். 'எனக்கு' அனுபவம் வேண்டும் என்கிறீர்கள். அந்த 'நான்' என்பது யார்? முதலில் 'நான்' யாரென்று தெரிந்து கொண்டால் உண்மை தெரிந்துவிடும். செய்யவேண்டியது ஒன்றுதான். தனக்குள்ளே பார்வையைத் திருப்பினால் எல்லா விடைகளும் அங்கே இருக்கின்றன.

பால்: குருவின் உதவியோடு செய்தால் தன்னை அறிய எவ்வளவு நாட்களாகும்?

பகவான்: சிஷ்யனின் பக்குவத்தைப் பொறுத்தது அது. வெடிமருந்தில் உடனே தீப்பற்றுகிறது. அதுவே கரியில் தீப்பிடிக்க நிறைய நேரமாகிறது.

இது பகவான் உபதேசங்களுள் தலையாயதாகும். அதை மிக எளிமையாகச் சொல்லிவிட்டார். அவருடனான இன்னொருமொரு உரையாடலும் பகவானின் கருத்தைத் தெளிவாக்கும்.

பால்: நாம் மிகச் சிக்கலான காலத்தில் வாழ்கிறோம். இந்த உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றி பகவானின் கருத்து என்ன?

பகவான்: எதிர்காலத்தைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கு நிகழ்காலம் நன்றாகத் தெரிந்துவிட்டதா? நிகழ்காலத்தில் கவனம் வை, எதிர்காலம் தானாகவே சரியாக அமையும்.

பால்: ஒரு நட்புறவும் பரஸ்பர உதவியும் கொண்ட நல்ல யுகத்தை உலகம் விரைவிலேயே காணுமா, இல்லை குழப்பமும் போருமே நீடிக்குமா?

பகவான்: இந்த உலகை ஆள்கிறவன் ஒருவன் இருக்கிறான். அதைக் கவனித்துக் கொள்வது அவனுடைய வேலை. உலகைப் படைத்தவனுக்குப் பார்த்துக்கொள்ளவும் தெரியும். இந்த உலகின் பாரத்தைத் தாங்குவது அவன், நீயல்ல.

பால்: பாரபட்சமற்ற கண்களோடு சுற்றுமுற்றும் பார்த்தால் இந்தக் கருணைக்கான அடையாளமே தெரியவில்லையே.

பகவான்: நீ எப்படியோ, இந்த உலகம் அப்படியே. உன்னைப் புரிந்துகொள்ளாமல் இந்த உலகைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில் என்ன பலன்? ஒரு உண்மையான 'தேடுவோன்' நீ கேட்கிற கேள்வியை கேட்க அவசியமில்லை. இத்தகைய கேள்விகளில் மக்கள் தமது சக்தியை விரயம் செய்கின்றனர். உன்னிடமிருக்கும் உண்மையை முதலில் கண்டுபிடி, பிறகு உலகத்தின் உண்மையை நீ புரிந்துகொள்வாய்.

1934-இல் பால் பிரண்டன் A Search in Secret India என்ற புத்தகத்தை எழுதினார். அது உலகம் முழுவதும் அவருக்குப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்ததோடு, ரமண பகவானின் அற்புத வாழ்க்கையையும் போதனைகளையும் கடல்கடந்து எடுத்துச் சென்றது. இன்றைக்கும் இப்புத்தகம் மிக அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் ஒன்று. பூமி உருண்டையின் ஏதேதோ மூலைகளிலிருந்து ஆன்மிகப்பசி கொண்டவர்களை அருணாசலத்திற்கு இழுத்து வருவதில் இப்புத்தகத்திற்கு நிகர் கிடையாது.

தன்னுடைய தேடல் முடிந்தது என்று புரியாத பால் பிரண்டன் மீண்டும் இந்தியாவை ஒருமுறை சுற்றினார். எங்குமே அவருக்கு மனம் ஒன்றவில்லை. எனவே ரமணாச்ரமத்துக்கு இரண்டாம் முறையாகச் சில வருடங்களிலேயே திரும்பி வந்தார். இந்தமுறை பகவானின் அருட்பார்வையின் கீழ் அவருக்கு சமாதிநிலையின் சுவை சற்றே தெரிந்தது. உடல்நிலை காரணமாக இந்தியாவை விட்டு அகன்றாலும் வாழ்நாள் முழுவதும் பகவானைத் தன்னுடனே உணர்ந்து, வழிகாட்டலைப் பெற்றார் பால் பிரண்டன்.

ஓம் நமோ பகவதே ரமணாய|

February 23, 2017

ரமண சரிதம்: பால் பிரண்டனின் காணாமல் போன கேள்விகள்


இதன் முந்தைய பகுதியைப் படிக்க: பால் பிரண்டன்

ஒரு ஞானி மற்றொரு ஞானியை மிக எளிதில் அடையாளம் கண்டுகொள்கிறார், அவர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும். பால் பிரண்டனோ ஊருக்குத் திரும்பிப் போக ஏற்பாடுகள் செய்தாயிற்று. எனவே திருவண்ணாமலைக்குப் போவதாக உறுதியளிக்கவில்லை. ஆனால் முன்னரே ஒரு சாது இவரைத் திருவண்ணாமலைக்கு அழைத்ததும், தான் மறுத்ததும் நினைவுக்கு வந்தது. மீண்டும் சங்கராச்சாரிய சுவாமிகளிடம் விடைபெறும்போது அவர் கேட்டார் "கண்டிப்பாகத் திருவண்ணாமலை போகிறீர்களல்லவா?"

மழுப்பலாக ஏதோ சொல்லிவிட்டுச் சென்னை வந்தபோது நள்ளிரவு. வந்தால் முதலில் இவரைக் கூப்பிட்ட அதே சாது, பிரண்டன் திருவண்ணாமலை வருகிறாரா என்று கேட்பதற்காகக் காத்திருந்தார். அவரிடம் பேசிவிட்டுப் படுத்தார் பிரண்டன். படுத்தவர் காரணமேயில்லாமல் சற்று நேரத்தில் விழித்துகொண்டார். ஏதோ மின்காந்த அலைகளால் சூழப்படுவதுபோல் உணர்ந்தார். ஒரே இருள். தலையணைக்கடியில் இருந்த பைக் கடிகாரத்தில் மணி பார்த்தார். இரண்டே முக்கால். கால்மாட்டில் அப்போது ஓர் ஒளிவட்டம் தோன்றியது. அதில் சங்கராச்சாரியாரின் தோற்றம்! இருக்க முடியாதே, அவர் செங்கல்பட்டில் அல்லவா இருக்கிறார். கண்ணை மூடினாலும் அந்த உருவத்தோற்றம் தெரிந்தது.

"அடக்கத்தோடும் எளிமையோடும் இரு. நீ தேடுவது உனக்குக் கிடைக்கும்" என்று சொன்னார் அமானுஷ்யமாக வந்த ஆச்சாரிய சுவாமிகள். தன்னை மீறிய பெரும் சக்தியின் திட்டத்தில் தான் ஒரு காய் ஆக இருப்பது பால் பிரண்டனுக்குப் புலப்படலாயிற்று. மறுநாள் ரமணரைப் பார்க்கப் புறப்பட்டுச் சென்னையிலிருந்து போனார். ரயிலில் போகும் போதெல்லாம் ஆயிரம் கேள்விகள் மனதில். பத்திரிக்கையாளர், அதிலும் நாத்திகர், கேள்வி கேட்பதில் என்ன ஆச்சரியம். எல்லாவற்றையும் ரமணரிடம் கேட்டுவிடுவது என்று திட்டமிடபடிச் சென்றார்.

மனதை ஈர்க்கும் மலையைப் பின்னணியாகக் கொண்ட எளிய ஆச்ரமம் பால் பிரண்டனை வரவேற்றது. சாது சுப்பிரமண்யா ரமணர் இருக்கும் அறைக்குள் பிரண்டனை அழைத்துச் சென்றார். சுமார் இருபது பேர் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார்கள். பகவான் இவர் வந்ததைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. உயர்ந்த நெற்றி, நீண்ட கைகளும் கால்களும், விழிகளில் அசாதாரண ஒளி--கற்சிலை தோற்றுப்போகும்--அப்படியே உட்கார்ந்திருந்தார் பகவான்.

தன் பக்கம் திரும்ப மாட்டாரா என்று பிரண்டனின் மனம் ஏங்கியது. இத்தகைய அலட்சியமான வரவேற்புக்குப் பழக்கப்பட்டவரல்ல அவர். இதுகூடத் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளும் நடிப்புத்தானோ என்றுகூட  அவருக்குத் தோன்றியது. ஆனாலும் மவுனமாக அமர்ந்திருந்தார் பகவானின் முன்னே. நேரம் செல்லச் செல்ல மனம் அலை ஓய்ந்த கடல்போல ஆயிற்று. எல்லாக் கேள்விகளும் ஒவ்வொன்றாய் மறைந்தன. "நம்முடைய அறிவு ஏராளமாய்க் கேள்விகளை எழுப்பி நமக்குத் தொல்லை கொடுக்கிறதோ?" என்று தோன்றத் தொடங்கியது. பகுத்தறிவாளருக்கு இப்படித் தோன்றியது விந்தையே.

யாரோ ஒரு அன்பர் கேட்டார் "சுவாமியிடம் ஏதாவது கேட்க வேண்டுமா?"

கேள்வியா? கேட்டால் இப்போதிருக்கும் இந்த அளவற்ற அமைதி குலைந்துவிடும்போல் இருக்கிறதே. பேச்சே தேவையில்லை போலிருக்கிறதே. இப்படி நினைக்கின்ற நேரத்தில் பகவன் சிறிதே தலையைத் திருப்பி ஆயிரம் நிலவுகளின் குளிர்ச்சி பொருந்திய பார்வையை பிரண்டனின் மீது பதித்தார். உள்ளே ஆனந்தம் பொங்கி எழுந்தது. "இப்போது எதுவும் கேட்கத் தோன்றவில்லை" என்று கூறிவிட்டு எழுந்தார்.

தொடரும்...

February 09, 2017

ஸ்ரீ ரமண தரிசனம் - 1


ரமணரை அறிய நினைப்பது ஒரு முயற்சிதானே தவிர, அது இயலக்கூடுவது அல்ல. ஒரு ஞானியை இன்னொரு ஞானியே அறியமுடியும் என்பார் ரமண பகவான். ஒரு பக்தனை, ஒரு யோகியைப் பார்த்த உடனே புற அடையாளங்கள் அவனை இனம் காட்டும். ஒரு ஞானிக்கு எந்த வெளிப்படையான சின்னங்களும் கிடையாது. ரமணரே சொல்லும் கதை ஒன்று உண்டு. அது பிரபுலிங்க லீலை என்ற நூலில் இருக்கும் 'மருள சங்கரதேவரின் கதை' என்பதாகும்.

மருள என்றால் கன்னடத்தில் பைத்தியக்காரன் என்று பொருள். இந்த மருள சங்கரதேவர் ஒரு மடத்தின் வெளியே எச்சில் இலைகள் எறியப்படும் இடத்தில் வாழ்ந்தார். மடாதிபதியோ மற்றவர்களோ இவரைப் பற்றி அறிய மாட்டார்கள். ஒருமுறை அல்லம பிரபு என்னும் உலகறிந்த ஞானி அந்த வழியே போகும்போது மருள சங்கரர் அந்தக் குப்பையிலிருந்து எழுந்து வந்து அல்லமரின் முன்னே நெடுக விழுந்து நமஸ்கரித்தார். அல்லமர் அவரை அப்படியே தூக்கி எடுத்து அரவணைத்தார். இருவருக்குமே மற்றவரின் அருமை தெரிந்திருந்தது என்பார் ரமணர்.

நம்மைப் போலவே சாப்பிட்டு, உறங்கி, உலவி, பேசி, பல வேலைகள் செய்யும் இவரிடம் அப்படி என்ன இருக்கிறது என்று நினைத்தவர்கள் பலருண்டு. அவரது தரிசனத்தால் பலன்பெறும் அரிய சந்தர்ப்பம் அவர்களுக்கு இன்னும் வரவில்லை என்றுதான் அதற்குப் பொருளே தவிர, பகவான் தானாகவேதான் எப்போதும் இருந்தார். இன்னும் சொல்லப்போனால் "பகவானுடைய சிரிப்பைவிட அழகான பொருளொன்று உலகில் இருப்பதாக என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை" என்றார் சாட்விக். அருளின், கருணையின், ஞானத்தின் சிரிப்பல்லவா அது. அதைவிட அழகு வேறெது இருக்கமுடியும்.

ஆதாரம்: மதுரபாரதியின் ரமண சரிதம்

February 03, 2017

ஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 3



கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒருமுறை ரமண பகவான் முன்னிலையில் தரிசனக் கூடத்தில் உட்கார்ந்திருக்கையில் அவரது ஆள்காட்டி விரலில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை, ஆனால் பொறுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். சிறிது நேரத்தில் பகவான் தனது ஆள்காட்டி விரலை நீவி விட்டுக் கொள்வதைப் பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி, அவரது விரலிலிருந்த வலி முற்றிலும் நீங்கிவிட்டது. இவ்வாறு பகவான் கருணையினால் ஏற்ற நோய்கள் எவ்வளவோ.

ஒரு கதை உண்டு. நெடுநாள் தவம் செய்த ஒருவரின் முன்னே ஸ்ரீ கிருஷ்ணன் தோன்றினார். என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார் கிருஷ்ணன். பக்தர் தனது வலது காலில் இருந்த யானைக்கால் நோயை இடது காலுக்கு மாற்றும்படி வரம் கேட்டார். ஆச்சரியப்பட்ட கிருஷ்ண பகவான் 'நீ நோய் குணமாகும்படி வேண்டியிருக்கலாமே. அதைவிட்டு ஏன் கால் மாற்றி வைக்கும்படிக் கேட்டாய்?' என்று வினவினார். அதற்கு பக்தர் சொன்னார் 'பிராரப்தத்தால் வந்த நோயை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். உன் வரத்தால் குணமாகிவிட்டதென்றால், மறுபடி அதை அனுபவிக்க இன்னொரு பிறவி எடுக்க வேண்டியதாகிவிடும்' என்றாராம் அவர்.

எனவே அவரவர் பிராரப்தத்தை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். ஆனால் பெருங்கருணை கொண்ட மகான்கள் பிறரது துன்பத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஒருவன் ரயிலுக்குப் போகும்போது தன்னுடன் பெட்டியை எடுத்துப் போகிறான். ரயிலில் ஏறியபின் பெட்டியை அதற்கான இடத்தில் வைத்துவிடுகிறானா அல்லது உள்ளேயும் அதைத் தன் தலைமேலே வைத்துக்கொண்டிருக்கிறானா? அப்படி வைத்துக் கொண்டிருப்பவனைப் பார்த்துச் சிரிக்கமாட்டார்களா? இந்த உதாரணத்தைத் தான் பகவான் சொன்னார். "குரு என்று ஒருவரை ஏற்றபின் ஏன் எல்லா பாரங்களையும் நீயே சுமந்துகொண்டிருக்கிறாய்? பெட்டியை அதற்கான இடத்தில் வைத்துவிட்டுப் பயணம் செய்வதுதானே உன் வேலை!' என்று கூறினார். தன்னிடம் வந்து சரணாகதி அடைந்தவர்களின் முழு பாரத்தையும் தானே ஏற்றார் ரமண பகவான்.

ஆதாரம்: ரமண சரிதம்

February 02, 2017

ஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 2



வைத்திய நாதனாக இருந்து தனது அன்பர்களின் நோய்களையெல்லாம் குணப்படுத்திய பகவானுக்கு எப்படி நோய் வந்தது என்ற கேள்வி எழுவது இயற்கையே என்பதாக நேற்று முடித்திருந்தோம். இனிப் பார்க்கலாம்.

'உடலின் வாரிசு நோய்' என்றார் பகவான். நோய்கள் பாவத்தின் பலன் என்பது இந்தியத் தத்துவம். பிராரப்தம் என்பார்கள். பாவ புண்ணியங்களை முழுதுமாய் எரித்துவிட்டவன் தானே ஞானி. ஆனால் சரித்திரத்தில் பார்த்தால் இயேசு சிலுவையில் அறையுண்டார், ராமகிருஷ்ண பரமஹம்சர் தொண்டையில் புற்றுநோய் கண்டு இறந்தார் என்று காண்கிறோம். இவர்களுக்கு ஏது பிராரப்தம்?

இந்த மகான்கள் தமது மிதமிஞ்சிய கருணையால் பிறரது பாவங்களை ஏற்றுக்கொண்டார்கள்.

அன்பரொருவர் தான் பெரிய பாவி என்று கருதினார். பகவானிடம் சரணடைந்தார். ரமணர் சொன்னார் 'சரி, நான் என்ன கேட்டாலும் கொடுப்பாயல்லவா?' என்றார். 'ஆமாம் சுவாமி' என்றார் அன்பர்.

'முதலில் உன் புண்ணியங்களை எனக்குக் கொடுப்பதாகச் சொல்' என்றார். 'சுவாமி, நான் எங்கே புண்ணியம் செய்தேன், உங்களுக்குக் கொடுப்பதற்கு. என் வாழ்வை நீங்கள் அறியமாட்டீர்கள்' என்றார். 'பேசாமல் நான் சொல்கிறபடிச் செய்' என்றார் பகவான்.

'சரி, என் புண்ணியத்தை எல்லாம் கொடுத்தேன்' என்றார். அடுத்து பகவான் சொன்னார் 'இப்போது உன் பாவத்தை எல்லாம் எனக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்'.

'ஐயோ பகவானே. நான் கொடிய பாவி' என்று அழுதார் அன்பர். 'சொல்லவே முடியாத பாவங்கள் செய்தவன் நான்' என்றார் அவர்.

'பரவாயில்லை, அதைப்பற்றி உனக்கென்ன. கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே உன் வேலை' என்று கூறினார். மிகுந்த துயரத்துடன் தனது பாபங்களையும் கொடுப்பதாகச் சொன்னார் அன்பர். அந்த நிமிடமே அவரது மனதில் மிகுந்த நிம்மதி ஏற்பட்டது, வாழ்க்கை மாறிப்போனது. பகவான் அவரது பாபங்களைச் சுமந்தார்.

இன்னும் பார்ப்போம்...

(தொடரும்)

ஆதாரம்: ரமண சரிதம், மதுரபாரதி எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது

February 01, 2017

ஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 1



ஒருமுறை பகவான் ஸ்ரீ ரமணர் விளையாட்டாகக் கூறினார்  “நீங்கள் என் காலைப் பிடித்துவிட்டுப் புண்ணியம் தேடிக்கொள்ளப் பார்க்கிறீர்கள். அந்த எண்ணெயை இங்கே கொடுங்கள், நானே தடவிக்கொள்கிறேன். எனக்கும்தான் கொஞ்சம் புண்ணியம் வரட்டுமே” என்று. எலும்புகள் தேய்ந்ததனால் அவருக்கு மூட்டு வலி வந்திருந்தது. முதுகு மற்றும் தோள்பட்டையையும் வலி தாக்கியது. ஒருமுறை அணிலொன்றைத் துரத்திய நாய் அதைப் பிடித்துவிடக் கூடாதே என்று தன் கையிலிருந்த தடியை வீசுகையில் கீழே விழுந்தார். அப்போது தோள்பட்டை எலும்பு முறிந்தது.

எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவரான அவரது தோற்றத்தில் வயதுக்கு மீறிய வயோதிகம் தென்பட்டது. அன்பர்கள் சத்தான உணவு, பழங்கள், ஊட்டமருந்துகள் அவர் உண்ணவேண்டும் என்று விரும்பினர். அவரோ எது வந்தாலும் 'எனக்கு நல்லதென்றால் மற்றவர்களுக்கும் அது நல்லதாகத்தானே இருக்கவேண்டும்' என்று கூறிப் பகிர்ந்தளிப்பவராகவே இருந்தார். யாராலும் அவருக்கென்று ஒன்றைத் தனியாகச் செய்ய முடியவில்லை.

இவை போதாதென்று அவருடைய இடது முழங்கை முட்டுக்குக் கீழே  சார்க்கோமா என்ற ஒருவகைக் கழலைக்கட்டி வந்தது. அது வந்த இடத்திலேயே மீண்டும் வரும் புற்றுநோய் வகையைச் சேர்ந்தது என்பதை அறியாத ஆசிரம வைத்தியர், பகவான் அவசியமில்லை என்று கூறியும், அறுவைசிகிச்சை செய்து அகற்றினார். பிப்ரவரி 1949இல் இது நடந்தது. ஒரு ஞானியின் உடலில் சஸ்திர சிகிச்சை செய்வது வழக்கமில்லை. ஆனால் அவர்மீது கொண்ட அளவுகடந்த அன்பே அவரது வார்த்தையை மீறச் செய்தது. பிறருக்கு நன்மை என்றால் யாராலும் பகவானின் அபிப்பிராயத்தை மாற்ற முடியாது. சொல்வதைச் செய்வதில் உறுதியாக இருப்பார். தனது உடல் என்னும்போது அவர் அத்தனை 'கருணை' காட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சில அன்பர்கள் பகவான் மனதுவைத்தால் தனது நோயைத் தானே குணப்படுத்திக்கொண்டு விடலாம் என்றனர். "நான் என் சங்கல்பத்தினால் என்னைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று சுப்பராமய்யா விரும்புகிறார். ஆனால் ஞானிக்கு சுயமாக மனம் இல்லை. அவனுக்கு உடலும் இல்லை; அந்த உடலுள் அதன் வாரிசாக இருக்கும் வியாதிகளும் இல்லை" என்று பகவான் அருகிலிருந்த சிலரிடம் கூறினார்.

இதில் நாம் கவனிக்க வேண்டியவை வியாதிகள் வருவது உடலுக்குத்தான் என்பதும் ஒரு ஞானி உடலுக்கு வரும் நோயைத் தனதாகக் கருதுவதில்லை என்பதும்தான். அதனால் பாதிக்கப்படுவதும் இல்லை. சிறிதும் மயக்கமருந்தே இல்லாமல் அந்தப் புற்றுக் கட்டியை பகவானின் கையிலிருந்து அகற்றினார்கள். மற்றவர்களானால் வலியில் கதறியிருப்பார்கள். பகவானோ யாருக்கோ நடப்பது போலப் பாராமுகமாய் இருந்தார். ஒருமுறை பகவானுக்குத் தொண்டர் ஒருவர் காலைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து 'எதுக்கோ என்னமோ செய்யற மாதிரி இருந்தது' என்றார். அதாவது கால் பிடித்துவிட்ட உணர்வுகூடத் தனக்கு இல்லை என்பது குறிப்பு.

ஆங்கில வைத்தியம், ஹோமியோபதி, யூனானி, மூலிகை வைத்தியம் என்று பலவகை முறைகளையும் அவர்மீது பிரயோகித்துப் பார்த்தார்கள். எப்படியாவது பகவான் குணமடைந்துவிடமாட்டாரா என்கிற ஆவல் அவர்களுக்கு. ஒவ்வொன்றையும் வேண்டாம் என்று கூறுவார், ஆனால் அவர்களது தொடர்ந்த வற்புறுத்தலுக்கு இணங்குவார். ரேடியக் கதிர்கள் பாய்ச்சினர், பச்சிலை அரைத்துப் பூசினர், கஷாய அபிஷேகம் செய்தனர், ஒத்தடம் கொடுத்தனர்--எதற்கும் மசியவில்லை கட்டி.

வைத்திய நாதனாக இருந்தது தனது அன்பர்களின் நோய்களையெல்லாம் குணப்படுத்திய பகவானுக்கு எப்படி நோய் வந்தது என்ற கேள்வி எழுவது இயற்கையே.

அதையும் பார்ப்போம்....

(தொடரும்)

- மதுரபாரதி எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட *ரமண சரிதம்* நூலிலிருந்து