May 29, 2015

அருணாசல அற்புதம்-9: புறா, குருவி எங்கள் ஜாதி!


விரிந்த முட்டை, பொரிந்த குருவி

ஒருமுறை பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் நீராடியபின், உயரத்தில் மூங்கில் கொடியில் காய்ந்துகொண்டிருந்த தனது துண்டை எடுக்க முயற்சித்தார். (மூங்கில் கழி ஒன்றைக் கயிறுகளால் கூரையிலிருந்து கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். அதில் துணியைக் காய வைப்பார்கள். இதைத்தான் மூங்கில் கொடி என்றது). அந்தக் கொடியின் ஓர் ஓரத்தில் ஒரு குருவி கூடுகட்டி அதில் முட்டை வைத்திருந்தது. துண்டை எடுக்கும்போது கைபட்டு அதிலிருந்த முட்டை கீழேவிழுந்து அதன் ஓட்டில் விரிசல்கண்டது.

ஞானிகள் எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணும் ஆன்மநேயம் கொண்டவர்கள். பகவானுக்குத் தம் கைபட்டு முட்டை விழுந்ததில் அதிர்ச்சி. அங்கிருந்த தொண்டர் மாதவனிடம், “என்ன காரியம் செஞ்சுட்டேன் பாரு!” என்று கூறியபடியே கீழேவிழுந்த முட்டையை எடுத்துத் தனது கருணைமயமான கண்களால் பார்த்தபடியே “இதோட அம்மா எவ்வளவு துக்கப்படும். இதுலேருந்து வரப்போற குஞ்சுக்கு நான் செஞ்ச நஷ்டத்தைப் பார்த்து அதுக்கு என்மேல கோபம் வரும்” என்று சொன்னதோடு நிற்கவில்லை. வெறும் கழிவிரக்கமோ, அனுதாபமோ வார்த்தையில் கூறிப் பயனில்லை என்பதை பகவான் அறிவார். நிவாரணம் என்பது அன்பில் ஊறிய செயலாக வெளிப்பட வேண்டும். “விரிஞ்ச இந்த முட்டையைச் சரிசெய்ய முடியுமான்னு பார்க்கலாம்” என்றபடி ஓர் ஈரத்துணியால் அந்த விரிசலடைந்த முட்டையைச் சுற்றிக் கட்டினார். அதைக் கூட்டுக்குள்ளேயே மறுபடியும் வைத்தார்.

மூன்று மணிநேரம் கழித்து மறுபடியும் அதைக் கையிலெடுத்துத் தன் அருட்பார்வையை அதன்மீது செலுத்தினார். இப்படித் தொடர்ந்து பலமுறை செய்தார். ஒவ்வொரு முறையும் “இந்த விரிசல் சேர்ந்து கொள்ளட்டும். முட்டை பொரிந்து இதிலிருந்து குஞ்சு சௌக்கியமாக வெளியே வரட்டும்” என்று சொல்வார். ஞானியின் பார்வையில், அவர் கையின் ஸ்பரிசத்தில், அவர் சொல்லும் வார்த்தையின் கனத்தில் எதுதான் குணமடையாமல் இருக்கும்!

ஒருவார காலம் இப்படியே போனது. பகவான் ஒருநாள் பெருமகிழ்ச்சியோடு, “என்ன ஆச்சரியம்! விரிசல் மறைஞ்சுடுத்து. அம்மாக் குருவிக்கு சந்தோஷமாயிடும். அது அடைகாத்து குஞ்சு பொரிக்கும். உயிர்ச்சேதம் செய்யும் பாபத்திலேயிருந்து ஈசுவரன் என்னைக் காப்பாத்தியிருக்கான். குஞ்சு வரவரைக்கும் பொறுத்திருந்து பாக்கலாம்” என்று கூறினார்.



சிலநாட்களில் சிறிய குருவிக்குஞ்சு ஒன்று செவ்வந்திப்பூப் போல வெளியே வந்தது. முகத்தில் சந்தோஷம் பொங்க பகவான் அதைக் கையிலெடுத்து வருடிக் கொடுத்தார். மற்றவர்களும் வாங்கிப் பார்த்தனர். அந்தச் சமயத்தில் பகவான் முகத்திலிருந்த ஒளிப் பெருக்கை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. ‘மமைவாத்மா சர்வ பூத அந்தராத்மா’ (என்னுள் இருக்கும் இந்த ஆத்மா எல்லா உயிர்களுனுள்ளும் உறையும் ஆத்மாவே) என்ற வாக்கியத்தை அனுபூதியாக உணர்ந்தவரல்லரோ அவர்.

அடிபட்ட புறாவுக்கும் அன்பு, அடித்த வேடனுக்கும் அன்பு

ஒருநாள் பகவான் மலையில் உலாவிவிட்டு வரும்போது அவர் காலடியில் ஒரு புறா வந்து விழுந்தது. சற்றுத் தொலைவில் ஒரு வேடுவச் சிறுவன் தயங்கித் தயங்கி வந்து கொண்டிருந்தான். "அவன் பசிக்கு இது ஆகாரம். ரெண்டணா இருந்தால் அவனுடைய பசி போய்விடும்" என்று சொல்லியபடி ரமணர் புறாவை எடுத்து ஆதரவாகத் தடவிக் கொடுத்தார். அருகில் ராஜகோபாலய்யரும் பகவானின் உதவியாளரும்தான் இருந்தார்கள். "ஆச்ரமத்திலிருந்து இரண்டணா வாங்கி வா" என்று பகவான் சொல்லியிருந்தால் உதவியாளர் போயிருப்பார். ஆனால் 'தன்னுடைய ஆச்ரமம்' என்றெல்லாம் அவர் நினைத்ததில்லையே.

அதேபோல, புறாவை அடித்ததற்காக வேட்டுவச் சிறுவனையும் கடிந்துகொள்ளவில்லை. அவரவர் தர்மம் அவரவருக்கு என்பதில் தெளிவாக இருந்தார் பகவான். அவனுடைய பசி தீரவேண்டும் என்பதிலும் அக்கறை காட்டினார்.

ராஜகோபாலய்யர் ஓடிப்போய் ஆச்ரம அலுவலகத்தில் கடனாக இரண்டணாவை உடனடியாக வாங்கிக் கொடுத்து அவனை அனுப்பிவிட்டார். பின்னர் ஊருக்குள்ளிருந்த தனது வீட்டிலிருந்து பைசாவைக் கொண்டுவந்து அந்தக் கடனை அடைத்தார். அன்றைக்கு அந்த பாக்கியம் அவருக்குக் கிடைத்தது.

புறா பகவானின் கையில் மயங்கிக் கிடந்தது. பகவான் உட்காரும் கூடத்துக்கு வந்தார்கள். "பச்சை திராட்சையைப் பிழிந்து இதன் தலையில் அடிபட்ட இடத்தில் விட்டால் குணமாகிவிடும்" என்று பகவான் சொன்னதுதான் தாமதம், ஒரு வெளியூர் அன்பர் பச்சை திராட்சைப் பொட்டலத்துடன் நுழைந்தார். "அடடே! சொல்லும்போதே திராட்சை வந்துவிட்டதே" என்று பகவான் ஆச்சரியப்படுவதாகக் காண்பித்துவிட்டு, புறாவின் தலைமேல் திராட்சைச் சாறைப் பிழிந்தார். சிறிது நேரத்தில் தலைதூக்கிப் பார்த்தது புறா. மெல்ல தத்தித் தத்தி நடந்தது, கொஞ்சம் பறந்து காட்டியது. பின்னர் வெளியே பறந்தே போய்விட்டது.


மனிதகுலத்தை மட்டுமல்ல, உயிர்க்குலம் முழுவதையுமே ஒரே தட்டில் வைத்து நேசிக்கும் அன்பை ஞானிகளிடமிருந்து நாமும் கற்கவேண்டும். அதைச் செயல்முறையில் காட்டிச் சென்ற மகான்களின் படத்தை வைத்துப் பூப்போட்டால் போதாது. இதயத்தை அன்பினால் விசாலமாக்கிக் கொள்வதுதான் உண்மையான ஆன்மீகம். இதயக்கோவிலில் குடிகொண்ட அந்த அன்பேதான் தெய்வம்.