May 27, 2004

பாக்காததும் பூக்காததும்...

நாம இலக்கியம் படிக்கும்போது எத்தனையோ கேள்விப்படுகிறோம். ஆங்கிலத்திலே phoenix, dragon என்றெல்லாம் படித்ததுமே 'இதெல்லாம் கவிஞர்களின் புருடா' என்று சொல்லிவிடுகிறோம். அதை அழகாக 'கற்பனை' என்றும் சொல்லலாம். போகட்டும், தமிழில் படிக்கும்போது பல பூக்களும், பிராணிகளும் உண்மையா கற்பனையா என்றே தெரிவதில்லை. காரணம் நமக்கு யாரும் தேடிப்பிடித்து எது எந்தப் பூ என்று சொல்லவில்லை. அப்படிச் சிலவற்றை இங்கே அறிமுகப் படுத்துகிறேன்.

முதலில் ஞாபகத்துக்கு வருவது காந்தள் மலர்தான். தமிழறிஞரும், கலைமகள் இதழைத் தொடங்கியவருமான வாகீசகலாநிதி கி.வா.ஜகன்னாதன் அவர்கள் தான் தொடங்கிய புத்தகப் பதிப்பகத்துக்கு காந்தளகம் என்றே பெயர் வைத்திருந்தார். அவர் காந்தள்மலர் எப்போதுமே பெண்களின் கைக்கு உவமையாகச் சொல்லப்படுவது.

சீதை இராமரோடு வனவாசம் போகும்போது காட்டிலே ஒரு காந்தள் பூவின் மேல் ஒரு கிளி உட்கார்ந்து கோதிக்கொண்டிருக்கிறது. அதைப் பார்த்ததும் இராமனுக்கு சீதை தன் கையில் ஒரு மாந்தளிரை வைத்துக் கொண்டிருந்தாற்போலத் தோன்றுகிறதாம்.


சேந்து ஒளி விரி செவ்வாய்ப் பைங்கிளி செறி கோலக்
காந்தளின் மலர் ஏறிக் கோதுவ, கவின் ஆரும்
மாந்தளிர், நறு மேனி மங்கை! நின் மணி முன்கை
ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய்!


[அழகிய சிவந்த அலகினைக் கொண்ட பசுங்கிளிகள், அடர்ந்து நிற்கும் காந்தள்மலர் மீது ஏறித் தம் சிறகைக் கோதுகின்றன. அது நறுமணம் வீசும் மேனிகொண்ட நீ, உனது மாணிக்கம் சூடிய முன்கையில் ஒரு மாந்தளிரை ஏந்தினாற்போல உள்ளது. இந்த அழகைக் காணுவாயாக!]

குமுதம், செவ்வாம்பல், செவ்வல்லி, செங்கழுநீர் ஆகிய பெயர்கள் ஒரே பூவைக் குறிப்பன.

வரம்பு எலாம் முத்தம்; தத்தும் மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை


என்று கம்பன் கோசல நாட்டை வர்ணிக்கும்போது சொல்கிறான். எருமைமாட்டின் குளம்புகள் பதிந்ததால் ஏற்பட்ட குழிகளிலும் கொள்ளைகொள்ளையாகக் செங்கழுநீர் பூக்கிறதாம்.

அல்லி என்பது சாதாரணமாக வெள்ளை நிறத்திலிருக்கும். நீலநிற அல்லியை நீலம், கருங்குவளை, காவி, குவளை என்றெல்லாம் சொல்வார்கள். விழித்துப் பார்க்கும் அழகிய கண்களுக்கு உவமையாக அடிக்கடி சொல்லப்படும் பூ இதுதான். பாரதியாருக்கு குவளைக்கண்ணன் என்று ஒரு நண்பர் இருந்தாரே நினைவிருக்கிறதா?

"எட்பூ ஏசிய நாசியாய்" என்று பெண்ணின் அழகான மூக்குக்கு எள்ளுப்பூவை உதாரணமாகச் சொல்கிறது மனோன்மணீயம். பக்கவாட்டுத் தோற்றம் கிடைத்தால்தான் காரணம் சரியாக விளங்கும். கிடைக்காததால் இதையே இங்கு இட்டிருக்கிறேன்.


இராமனைக் காயாம்பூ நிறத்தவன் என்று கம்பன் வர்ணிப்பான். இந்த நிறம் பாருங்கள், எவ்வளவு அழகு!


முருக்கிதழ் என்று சிவந்த உதடுகளைக் கவிதைகள் வர்ணிக்கும். முறுக்குக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. 'முருக்கான்' (தாம்பூலம்) தரித்த மலையாள மங்கையின் உதடும் இல்லை. இதை வடமொழி பலாசம் என்றும் சொல்லும். தமிழிலே முள்ளூமுருங்கை, புரசமரம். இந்த மரம் ஏராளமாகப் பூத்திருக்கும்போது காடு தீப்பற்றி எரிவதுபோல இருக்கும் என்பதால் இதை Flame of the forest என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.


இப்போது அனிச்சப்பூ. இது விருந்தினர் மனதின் மென்மைக்கு உவமையாகச் சொல்லப்படுவது. பல சுவையான விதங்களில் இது திருக்குறளில் கையாளப்படுகிறது. இதைத் தனியாகத்தான் விளக்கவேண்டும். ஒரு முக்கியமான விஷயம் - இப்படி ஒரு பூ கிடையாது. கற்பனைதான்.

May 22, 2004

நெருப்புக்குள் தூங்க முடியுமா? - 2

வறுமையில் வாடிய மேன்மக்களிலே பாரதியும் ஒருவன். தேசபக்தனாய், கவிஞனாய்ப் புகழ்பெற்ற பின்னும் வறுமை அவனை விட்டு நீங்கவே இல்லை. அவன் வறுமையைப் பற்றிச் சொல்வதைக் கேளுங்கள்:

பொருளிலார்க் கிலை யிவ்வுலகு என்ற நம்
புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்று காண்
பொருளிலார்க்கு இனமிலை, துணையிலை
பொழுதெலாம் இடர் வெள்ளம் வந்து எற்றுமால்


(சுயசரிதை, பாடல் 43)

ஆக, கொடிதினும் கொடிதாகிய வறுமை இருக்கும் போது மேலே கூறிய அத்தனைத் துன்பங்களும் வந்து சுற்றிக்கொள்ளும். அது எப்படி என்றால் நெருப்புச் சூழ்ந்தது போலவாம். ஓர் ஓலைக்குடிசையில் ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். குடிசையில் நெருப்புப் பற்றிக்கொண்டுவிட்டது. 'சரி, அது எரிந்து முடியட்டும். நாம் தூங்கி எழுந்து பார்த்துக் கொள்ளலாம்' என்று அவன் தன் தூக்கத்தைத் தொடரமுடியுமோ?

அப்படி நெருப்புக்கு நடுவிலே தூங்குவது ஒருவேளை சாத்தியமானால் கூட, வறுமைகொண்டவன் கண்மூடுவது சாத்தியமே இல்லை என்கிறார் வள்ளுவர்.


நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாது ஒன்றும் கண்பாடு அரிது


(குறள் 1049, நல்குரவு)

[நிரப்பு - வறுமை; கண்பாடு - உறக்கம்]

இந்த நெருப்பைப் பற்றித் தெரிந்துகொள்வது வெறும் இலக்கிய ரசனைக்காக அல்ல. இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று தெரிந்தபின் நமக்கு உறக்கம் வரக்கூடாது. நமது வருமானத்தில் பத்து சதவிகிதம் தரும காரியங்களுக்குச் செலவிட வேண்டும் என்று அறநூல்கள் சொல்கின்றன.

ஒன்று யோசித்துப் பாருங்கள், காயசண்டிகைக்காவது பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தால் சாபவிமோசனம் உண்டு. நம் நாட்டு ஏழைகளுக்கு? ஆகவேதான் தனக்கு உணவளித்துக் காக்கும் ஒரு வள்ளலைப் புறநாற்றுப் பாணன் ஒருவன் "பசிப்பிணி மருத்துவன்" (புறநானூறு: பாடல் 172) என்று போற்றினான்.

மார்கழி மாதம் பாவை நோன்பிருக்கும்போது "நெய்யுண்ணோம், பாலுண்ணோம்..." என்று தனக்கான கட்டுப்பாடுகள் மட்டிலுமே கூறாது, "ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைகாட்டி" என்று அறம் செய்வதையும் வலியுறுத்துகிறாள் கோதை நாச்சியார் தன் திருப்பாவையில். கிட்டத்தட்ட அதே சமயத்தில் வரும் ரமலான் திருநாளை ஈகைப் பெருநாள் என்றே கொண்டாடுகின்றனர் மகமதியச் சகோதரர்கள். கிறித்தவ மதமோ கருணையைத் தனது தனியுரிமையாகவே கொண்டாடுகிறது. எப்படியிருப்பினும் எந்த மதமும் வருடத்தில் ஒரு மாதம் மட்டும் ஏழைகளுக்கு அன்னமிடு, ஏனைய நாட்களில் எரிந்து விழு என்று சொல்வதில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வலியுறுத்துவதன் காரணம், ஒருமுறை பழகிவிட்டால் நல்லவற்றை நாம் தொடர்ந்து செய்வோம் என்பதுதான்.

"எல்லோருக்கும், அவர் இவர் என்று வித்தியாசம் பார்க்காமல், உணவளியுங்கள். நீங்கள் உண்ணுமுன்னாலே இதைச் செய்துவிட்டு உட்காருங்கள். ஏராளமாய்ப் பொருளைச் சேர்த்து வைக்காதீர்கள். காணாததைக் கண்டவர் போல மிக அவசரமாக உணவு உண்ணாதீர்கள். காக்கை எக்காலமாய் இருந்தாலும் பிற காகங்களை அழைத்துவிட்டுத்தான் உண்ணும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்" என்று திருமந்திரம் சொல்கிறது.

ஆர்க்கும் இடுமின்; அவர் இவர் என்னன்மின்;
பார்த்திருந்து உண்மின்; பழம்பொருள் போற்றன்மின்;
வேட்கையுடையீர்! விரைந்து ஒல்லை உண்ணன்மின்;
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே!


(திருமந்திரம் 250)

பிறந்த நாள், மணநாள், புத்தாண்டு என்று ஏதோ ஒரு காரணம் கற்பித்து ஆடம்பரமான விருந்துகளுக்குச் செலவழிக்கத் தயங்காத நாம் ஓர் ஏழைக்கு ஒரு ரூபாய் கொடுக்க ஆயிரம் தத்துவம் பேசுவோம். "நல்ல தடியனாக இருக்கிறானே, வேலை செய்தால் என்ன?" என்றெல்லாம் சொல்லுவோம். உண்மையிலேயே பாத்திரம் அறிந்து பிச்சை இடுவதற்காக இப்படிப் பேசினால் வரவேற்கத் தக்கதுதான். ஆனால் தர்மம் செய்வதைத் தவிர்ப்பதற்காகப் பேசும் சாமர்த்தியப் பேச்சாக இது இருந்து விடக்கூடாது.

ஒருவருக்காவது நெருப்பின் நடுவில் தூங்காத நிலை உங்களால் ஏற்படுமேயானால் அது வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுக்கும். 'பசியால் வாடுகிறவனின் வயிறுதான் உங்கள் செல்வத்தை வைப்பதற்கு மிகப் பாதுகாப்பான வங்கி' என்று வள்ளுவன் சொல்லியிருப்பது தெரியுமா?


அற்றார் அழிபசி தீர்த்தல் அ·து ஒருவன்
பெற்றான் பொருள் வைப்புழி


(குறள் 226, ஈகை)

[அற்றார் - வறியவர்; அழிபசி - கொல்லும் பசி; தீர்த்தல் - தீர்ப்பாயாக; பெற்றான் - பணக்காரன்; வைப்புழி - சேமிக்கும் இடம்]

இது வட்டி வீதம் குறையவே குறையாத வங்கி, என்றைக்கும் இழுத்து மூடி முதலுக்கு நட்டம் ஏற்படுத்தாத வங்கி, நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் உங்களைத் தேடிவந்து பலன் தரும் வங்கி, உங்கள் சந்ததியாருக்கும் நன்மை செய்யும் வங்கி. குறைந்த பட்சம் ஆத்ம திருப்தியை உடனடியாகத் தரும் வங்கி.

சரி, வருமானத்தில் 10 சதவீதம் அதிகமாகத் தோன்றினால், 5 விழுக்காட்டிலிருந்து... வேண்டாம் 2 பெர்சன்ட்டிலிருந்து தொடங்குவது எப்படி? எனைத்தானும் நல்லவை செய்க...

வாருங்கள் பசித்தீயை அணைப்பதிலிருந்து தொடங்கி, வறுமைத்தீயை ஒழிப்போம்.

May 21, 2004

நெருப்புக்குள் தூங்க முடியுமா? - 1

காயசண்டிகை என்று ஒரு வித்தியாதர மங்கை இருந்தாள். காஞ்சனன் என்பவனின் மனைவி. இருவரும் ஒரு நாள் பொதியமலையின் அழகைப் பார்த்து வரலாமே என்று கிளம்பினார்கள். காதல் மயக்கத்தில் இருந்தனர்.

பொதிய மலையின் சாரலில் ஒரு நதி இருந்தது. அதிலே நீராடுவதற்காக விருச்சிகன் என்றொரு முனிவன் இறங்கியிருந்தான். அவன் பன்னிரண்டு வருடங்கள் உண்ணாமல் விரதம் இருந்து வந்திருக்கிறான். கரையின்மேல் பனம்பழம் போலக் கருப்பானதும் பெரியதுமான ஒரு நாவல் பழத்தை, தேக்கிலையின் மேலே வைத்துவிட்டுக் குளிக்க நீரில் இறங்கி இருக்கிறான். அந்த நாவல் பழம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுக்கக் கூடியது. அதை உண்ணுபவர்களுக்கு அதன்பின் பன்னிரண்டு ஆண்டுகள் பசியெடுக்காது. குளித்துவிட்டு வந்து, பூசை முடித்துவிட்டு விருச்சிகன் அந்த நாவற் கனியை உண்ணவேண்டும்.

காயசண்டிகையும் காஞ்சனனும் காதல் மயக்கத்தில் பொதியமலையின் அழகைப் பருகியபடி நடந்து வருகிறார்கள். அவர்களுக்குத் தன் முன்னாலே என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. அந்த நிலையில் காயசண்டிகை அந்த அரிய நாவல் பழத்தைக் காலால் மிதித்துச் சிதைத்துவிடுகிறாள்.

குளித்துவிட்டு வந்த விருச்சிக முனிவர் இதைப் பார்க்கிறார். கோபம் வருகிறது அவருக்கு. "பெண்ணே, இந்த திவ்வியமான கனியை நீ சிதைத்துவிட்டாய். உனக்கு இனி மீண்டும் வானுலகம் செல்லும் மந்திரம் மறந்து போகும். அதுமட்டுமல்ல, அடுத்த முறை இந்தக் கனி மீண்டும் பழுத்து, நான் உண்ணா நோன்பினை முடிக்கும் வரையில் பன்னிரண்டாண்டுகள் நீ யானைத்தீ நோயாலே வாடுவாய்" என்று சபித்துவிடுகிறார்.


யானைத்தீ எப்படிப் பட்டது தெரியுமா? பசித்தீ - தீராத பசித்தீ. காயசண்டிகை அதை ஒரு அழகான உதாரணத்தோடு விளக்குகிறாள் கேளுங்கள்: "திருமால் இராமபிரானாக உலகில் அவதரித்தபோது, இலங்கைக்குப் பாலம் கட்டுவதற்காகக் குரங்குகள் கொண்டு வந்து எத்தனை மலைகளை விட்டெறிந்தாலும் கடலின் வயிறு நிரம்பாதது போல, எவ்வளவு உண்டாலும் தீராத பசித்தீயைக் கொண்டிருக்கிறது என் வயிறு."

"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடலரு முந்நீர் அடைந்த ஞான்று
குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை எல்லாம்
அணங்குடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசிப்
பட்டேன்"


(மணிமேகலை - உலக அறவி புக்க காதை: 9-14)

[நெடியோன் - திருமால்; முந்நீர், அளக்கர் - கடல்]

அப்படிப் பசித்தீ கொண்டவளால் தூங்கமுடியுமா? இங்கே பசித்தீக்குக் காரணம் முனிவன் தந்த சாபம். ஆனால் சாதாரணமாக நம்மைச் சுற்றிக் காணப்படும் பசிக்குக் காரணம் வறுமை.

மற்ற எல்லாவற்றிற்கும் உவமை சொல்லும் வள்ளுவன் "வறுமையைவிடக் கொடியது என்னவென்றால்" என்று தொடங்கி, யோசித்துப் பார்த்துவிட்டு, "வறுமையேதான்" என்கிறான். அதற்கு ஒப்பாகவோ, மிகையாகவோ வேறொன்றை அவனால் சொல்ல முடியவில்லை.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது


(குறள் 1041, நல்குரவு)

தற்போதையத் தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ளமுடியாத வறியவனுக்கு மறுமை, புண்ணியம் என்கிற எண்ணங்கள் தோன்றவே வழியில்லை. எனவேதான் "பசித்தவனுக்குக் கடவுள் ரொட்டி வடிவத்தில் வருகிறார்" என்று சொல்வதுண்டு. ஏழை ஒருவன் எத்தனை நியாயமான, அறிவுமிகுந்த சொற்களைச் சொன்னாலும் அதற்குப் பிறர் செவிசாய்க்க மாட்டார்கள்.
ஒரு கவிஞன் கூடத் தன் பத்து விரல்களிலும் வைரமோதிரங்களை அணிந்துகொண்டு, பின்னால் இரண்டுபேர் அவன் சொல்வதற்கெல்லாம் ஜால்ரா போட, இடுப்பிலே பட்டு வேட்டி அணிந்து நல்ல பந்தாவாகப் போய் நின்று கவிதை சொல்வானென்றால், அவனுடைய கவிதை விஷம்போல, வேப்பங்காய்போல இருந்தாலும் எல்லோரும் கூடிநின்று "ஆஹா, ஓஹோ! அற்புதம்!" என்று புகழ்வார்களாம். நான் சொல்லவில்லை, அவ்வை சொல்கிறாள்:

விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.


ஏழைசொல் அம்பலமேறாதது மட்டுமல்ல, அவன் செய்வதையும் சொல்வதையும் திரித்துக் கூறிப் புரளி பேசுவார்களாம் மற்றவர். அவனது குடும்பத்தினரின் நடத்தையைச் சந்தேகப்பட்டு அவதூறு சொல்வார்களாம். இவையெல்லாவற்றையும் வள்ளுவப் பெருமான் தன் குறளிலே பொதிந்து வைத்திருக்கிறார்.

இன்னும் உண்டு...

May 20, 2004

மின்னம்பல வெண்பாக்கள் (எளிய விளக்கத்தோடு)

இணையத்தில் முதன்முதலில் (டிசம்பர், 1999) வெளியான என்னுடைய வெண்பாக்கள் இவை. அப்போதே வெண்பா என்ற மரபுவடிவத்தில் அதிநவீனமான Internet என்னும் மின்னம்பலத்தைப் பாட முயற்சித்ததைக் கவனியுங்கள். ஓரளவு வெற்றியும் கண்டதாகவே நினைக்கிறேன். இது ஆறாம்திணை இணைய இதழில் நண்பர் வாஞ்சிநாதன் தொடர்ந்து தொகுத்து எழுதி வந்த 'வெண்பா மேடை'யில் வெளியாயிற்று.

படிப்பவருக்கு எளிதாக இருக்கும் பொருட்டு, நான் அதை மீண்டும் இங்கே என் உரையோடு கொடுக்கிறேன்.

1. வீட்டிலேயே தல யாத்திரை


அலையார் அறுபடையும் மாலோன் உறையு
மலையாரே ஏறிடுவார் மண்ணில் - கலையாகும்
பொன்னம் பலம்வேண்டார் தன்னம் பலம்கொண்ட
மின்னம் பலக்கணினி யார்.

தன்னுடைய வீட்டில் சொந்தக் கணினியிலே இணைப்பை வைத்துக்கொண்டு அதில் வலைமேய்கிறவர்கள் அறுபடை வீடுகளுக்கும் போக மாட்டார் என்னும்போது திருமால் வசிக்கும் திருமலையில் ஏறுவாரா என்ன! அதேபோல அவர்களுக்குச் சிவபெருமான் இருக்கும் பொன்னம்பலமாகிய சிதம்பரமும் தேவையில்லை.

(எல்லா 'தெய்வீகப் பேரின்பத்தை'யும் வலையிலே கண்டுவிடுவர் என்பது தாத்பரியம்)

2. பிள்ளையாருக்கு வந்த 'மவுஸ்'

முன்னம் ஒருநாள் முருகன் வயிறெரியத்
தின்ன கனிக்கதையும் தீதன்று - சின்னதோர்
சுண்டெலியால் மூவுலகம் சுற்றிவரும் சூட்சுமமும்
கண்டோம் கணினியின் கண்.

முன்னால் ஒருகாலத்தில் சுண்டெலி வாகனப் பிள்ளையார் சுருக்கமான வழியில் உலகை வலம் வந்து ஞானப் பழத்தை வென்று முருகன் வயிற்றெரிச்சலைக் கொண்டது மெய்தான் போலும்! இப்போது பார்த்தால் இத்தனை பிள்ளையார்கள் உட்கார்ந்த இடத்தில் 'மவுஸின்' உதவியோடு உலகை வலம் வருகிற தந்திரத்தைக் கற்றுக்கொண்டுவிட்டார்களே!

3. மின்வலை என்னும் மாதவியோ?

ஆடக் களமுண்டு பாடத் தலமுண்டு
கூடக் குறுநகையார் கூடமுண்டு - ஊடாடும்
மின்வலையின் மாயங்கொள் பின்னலிலே வீழ்ந்தாரும்
பின்வருவ துண்டோ பிரிந்து.

இந்த மின்வலைக்குள்ளே நுழைந்துவிட்டால் ஆடல், பாடல் எல்லாம் பார்க்கலாம். துணைக்கு அழகிய இளம்பெண்களும் உடன் வருவர் (மின்வெளியில்தான்!). இப்படிப் பின்னலிடும் மின்வலைக்குள் விழுந்தவர்கள் மீண்டும் திரும்பிவந்ததாகச் சரித்திரம் உண்டோ?

4. இதுவும் ஒரு சக்களத்திதான்


உண்ணார் உறங்கார் ஒருபாதி யானதொரு
பெண்ணாள் முயக்கமும் பேணிடார் - எண்ணாது
புக்கார் கணினிப் பொதுவலையில் அஃதொக்கும்
சக்களத்தி உண்டாமோ சாற்று.

கணினியில் விரியும் இந்த வலையில் நுழைந்தவருக்கு அதுவே சக்களத்தியாகும். ஏனென்றால், ஒருமுறை இதன் சுவைகண்டவர் சாப்பாடு, தூக்கம், தன்னில் பாதியான தன் மனைவியின் முயக்கம் ஆகிய எல்லாவற்றையும் மறந்து போய்விடுவார்கள்.

5. சொர்ணம் கூட பலமல்ல

சொன்னம் பலமல்ல சுற்றம் பலமல்ல
இன்னம் எதுவும் பலமல்ல - துன்னுமோர்
சின்னத் திரையுள் செகமெல்லாம் காட்டுகின்ற
மின்னம் பலமே பலம்.

(சொன்னம்பலமல்ல - சொர்ணம் பலமல்ல)

இந்த யுகத்திலே, தங்கம் ஒருவனுக்கு வலிமை தருவதிலை; சுற்றத்தார் தருவதில்லை; வேறு எதனாலும் அவனுக்கு பலம் சேருவதில்லை. மிகச்சிறிய திரையைக் கொண்ட கணினிக்குள்ளே இந்த உலகத்தையெல்லாம் தந்து காட்டுகின்ற மின்னம்பலம் என்னும் அந்த பரவெளியே பலம்.

இப்போ சொல்லுங்க -- வெண்பா எந்தப் புதுக்கவிதைக்காவது குறைச்சலா என்ன? இன்றைய விஷயத்தை இவ்வளவு சுளுவாக, அழகாக, தெளிவாக சொல்லமுடியுதே. "ஆடத்தெரியாத...." என்று தொடங்கும் பழமொழி ஒண்ணு உண்டாமே?

(நன்றி: பேராசிரியர் பசுபதி, கனடா. என் கைவசம் இல்லாத இந்த வெண்பாக்களை எனக்கு நினைவூட்டித் தன் சேமிப்பிலிருந்து தந்தமைக்கு)

May 18, 2004

உங்களுக்கு அறிவு இருக்கிறதா?

கோவிச்சுக்காதீங்க, நான் கேட்டது வள்ளுவன் சொன்ன மாதிரி அறிவு.

உடனே "எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்..." என்று தொடங்கிவிடுவீர்கள். "அந்த அறிவு என்கிட்ட இருக்கிறது என்று சொல்வீர்கள். எனக்கு அறிவில்லை என்று சொல்லிக்கொண்ட முட்டாளை இதுவரை பார்த்ததில்லை.


அறிவுன்னா என்னான்னு இன்னொரு மாதிரியும் வரையறுத்திருக்கிறார் வள்ளுவர். அதைப் புரிஞ்சுக்கறதுக்கு முன்னாலே ஒரு புதிய சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

ஒட்பம் என்று ஒரு சொல் தமிழில் இருக்கிறது. இது ஒண்(மை) [ஒளி] என்ற வேர்ச்சொல்லில் கிளைத்தது. இவற்றின் பொருளைப் பார்ப்போம்:

ஒட்பம்: அறிவு, அழகு, ஒளி, நன்மை, மேன்மை, ஒண்மை, குறைவு; (கழகம்)
intelligence; prescience; wisdom; 1. beauty; 2. benefit; 3. excellence (TLS) - OTL

ஒண்மை: அழகு, ஒழுங்கு, ஒளி, அறிவு, நன்மை, மிகுதி, விளக்கம், கூரிய அறிவு, இயற்கையழகு, அறநெறி. (கழகம்)
1. brilliancy, splendour, brightness; 2. natural grace, beauty; 3. good, goodness, excellence; 4. knowledge, clearness of understanding, wisdom; 5. luxuriance, fullness, abundance.(OTL)

இப்போ குறள்:

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.


(அறிவுடைமை, 425)

குறளின் பொருள்:

"உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம். அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம்" என்பது பரிமேலழகரின் விளக்கம்.

தழீஇயது என்ற சொல்லுக்கு நட்பாக்குவது என்று பொருள்கண்ட பரிமேலழகர் தன்னுடைய பொறியில் தானே சிக்கிக்கொண்டுவிட்டார். ஏனென்றால் அந்நட்பை மலர்ச்சியும் கூம்புதலும் இல்லாமல் வைத்துக்கொள்ளும் நிலையே அறிவு என்று சொல்லி, அறிவுடைமையின் பரந்துபட்ட பொருளைத் திடீரென்று நட்புக்குள் குறுக்கிவிட்டார். பின்னால் வந்த பலரும் ஏறத்தாழ இந்த நட்புவலையிலே சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள் என்பதைப் பல உரைகள் நிரூபிக்கின்றன.

ஆனாலும் குதிரையேறிய சுந்தரர் சாதாரண ஆளல்ல. இந்தக் குறளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கான சூட்சுமத்தையும் அவரே சொல்லிவிடுகிறார். எப்படி?

அது அப்படியே இருக்க, நாம ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு சின்னப் பகுதியைப் பார்ப்போம்:

சுயம்புவ மனு என்னும் அரசருக்கு உத்தானபாதர், பிரியவிரதன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவனுக்கு அரசாள்வதில் சிறிதும் விருப்பமில்லாமல் போகவே தந்தை இளையவன் பிரியவிரதனை அழைத்து அரசனாகக் கட்டளையிட்டார். அவனும் இறைச்சிந்தனையுடயவனாய் இருக்கவே, காட்டுக்குத் தவம் செய்யப்போகிறான். பெரிய கதையைக் குறுக்குவோம்: நாரதர், பிரம்ம தேவர் முதலியோர் அவன் தவம் செய்யும் குகைக்குப் போய் அவனது உலகியல் கடமைகளை உணர்த்த அவன் திரும்பி வந்து ராஜ்யபாரம் ஏற்கிறான்.

பிரியவிரதன் பெருவீரனாக இருக்கவே பகையற்று வாழ்ந்தான். ஒருநாள் அவன் மேருமலைக்குப் போகையிலே, உலகின் ஒருபகுதி இருளாகவும், மற்றொரு பகுதி பகலாகவும் இருப்பதைக் காண்கிறான். (பாகவதத்தின் காலம் என்ன? எப்போது முதல் பாரதத்தினர் உலகில் ஒருபகுதி பகலாக இருக்கும்போது மற்றொரு பகுதி இரவாக இருந்ததை அறிந்திருந்தனர் போன்ற வியப்பான சங்கதிகளை ஆய்வாளர் விளக்கவேண்டும்). அக்காலத்தோர் மேருமலையை உலகின் மையமாகக் கருதினர். சூரியன் இதைச் சுற்றிவருவதாகவும் கூறினர். இது Geocentric Theory என்றழைக்கப் பட்டது.

விஷயத்துக்கு வருவோம். இப்படி மேருவைச் சுற்றிவருவதால் எப்போதும் உலகின் ஏதாவதொரு பகுதி இருளாக இருப்பது பிரியவிரதனுக்குப் பிடிக்கவில்லையாம். அவன் சூரியனோடு போரிட்டு, வென்று, உலகில் இருள் என்பதே இல்லாமல் செய்தான் என்கிறது ஸ்ரீமத் பாகவதம். நல்லவேளையாக மீளவும் யாரோ ஒரு அரசன் முன்னிருந்த நிலையே (status quo ante) கொண்டுவந்திருக்கவேண்டும்.

குளத்திலே இருக்கிற தாமரை காலையில் சூரியனைப் பார்த்து மலரும். சூரியன் மறைந்தால் வாடிவிடும். தாமரைக்கு வேறெதுவும் பொருட்டல்ல. ஆனால் மரக்கொம்பில் இருக்கும் மாம்பூவின் மலர்ச்சி சூரியனைப் பொறுத்ததல்ல. வாடி உதிரும்வரை மரத்தின்மேல் மலர்ந்திருக்கும். இப்போது பரிமேலழகரின் விளக்கத்தைக் கேளுங்கள்: "(உயர்ந்தோரோடு) கயப்பூப் போல வேறுபடாது, கோட்டுப் பூப்போல ஒருநிலையே நட்பாயினான் எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்."

கயம் என்றால் குளம். கயப்பூ - குளப்பூ. இரவில் மலரும் அல்லி போன்ற நீர்ப்பூக்களும் இருக்க நமக்கு ஏனோ மலர்தலும் கூம்பலும் என்ற உடனே தாமரையைத் தானே நினைவுக்கு வருகிறது?

தாமரைக் காடான இராமனை தசரதன் கூப்பிட்டு "புனையும் மா முடி புனைந்து, இந்த நல் அறம் புரக்க நினையல் வேண்டும்" என்கிறான். அப்படி, முடிபுனைந்து மன்னனாக வேண்டும் என்று சொன்னபோதும் இராமன் "காதல் உற்றிலன், இகழ்ந்திலன்; 'கடன் இது' என்று உணர்ந்தும்" அப்பணியை ஏற்கிறான். "ஹைய்யா! நான் ராஜாவாகப் போறேன்" என்று மூன்றுமுறை கூரை தலையில் இடிக்கும்படிக் குதிக்கவில்லை. தோளிலிருந்த துகிலையெடுத்துக் கொண்டு சாலையிலெல்லாம் "நான் ஆணையிட்டால்..." என்று பாடியபடி ஓடவில்லை. "ஐயையோ! நமக்கு அரசாட்சியெல்லாம் வாணாம்ப்பா. நான் சுதந்திரப் பறவை" என்று கழட்டிக் கொள்ளவும் இல்லை. மாமன்னன் சொன்னதைச் செய்வதல்லவா எந்தன் பணி என்று அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.

இராமன் முடிபுனையப் போகிறான் என்று உலகமே களியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்தில் அவனைப் பேரன்புடன் வளர்த்து ஆளாக்கிய சிற்றவை அழைக்கிறாள். தன் மேலாடையைப் பணிவோடு கையில் மடக்கிவைத்துக் கொண்டு, வாய்பொத்தி, "நாள் முழுதும் மேயப் போயிருந்த தாய்ப்பசுவை மாலையில் வந்ததும் கண்ட கன்றைப் போன்ற" இராமன் நின்றானாம்.

பரதன் அரசாள்வான்; நீ காட்டுக்குப் போய்த் தவம்செய்துவிட்டுப் பதினான்காண்டுகள் கழித்து வா என்ற இரண்டு இரண்டு செய்திகளை மன்னன் சொல்லச் சொன்னதாகக் கைகேயி சொன்னபோது இராமன் என்ன செய்தான்? பின்னால் அசோகவனத்தில் சீதை அனுமனிடம் சொல்கிறாள்:

'மெய்த் திருப்பதம் மேவு' என்ற போதினும்
'இத் திருத் துறந்து ஏகு' என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.


ஆமாம், 'நீ பட்டமேற்க வேண்டும்' என்றபோதும் சரி, 'காட்டுக்குச் சாமியாராகப் போ' என்ற சொல்லைக் கேட்டபோதும் சரி, இராமன் முகம் தாமரையைப் போலத்தான் இருந்ததாம். ஆனால் இது சித்திரத் தாமரை. உண்மையான கயப்பூ இருளைக் காண வாடுமே. இந்தப் பூ கைதேர்ந்த ஓவியன் கிழியில் தீட்டிய தாமரைப்பூ. எப்படி கிரேக்கத் தாழியில் பொறித்திருக்கும் மரத்தைப் பார்த்து "ஓ மகிழ்ச்சியான கிளைகளே! நீங்கள் இலையை உதிர்ப்பதில்லை, வசந்தத்தை நீங்கள் வழியனுப்புவதுமில்லை" (Ode on a Grecian Urn by John Keats) என்று கீட்ஸ் சொல்கிறானோ, அதே போல இந்த ஓவியத் தாமரைக்கும் மாற்றம் இல்லை. அட இராமனின் அறிவு வள்ளுவன் சொன்னாற்போல 'மலர்தலும் கூம்பலும் இல்லது' ஆக இருக்கிறதே!


ஏன்? கதிரவன் இன்னொரு புறம்தான் போயிருக்கிறானே தவிர, ஒரேயடியாகக் காணாமற் போய்விடவில்லை என்கிற விஷயம் இந்த முட்டாள் தாமரைக்கு தெரியவில்லை (முள்+தாள் தாமரை என்று சிலேடை பேசவில்லை நான்). தாமரை ஒரே நாளில் வாடுகிற பூவல்ல. தினமும் சூரியன் மறைவதையும் மீண்டும் மறுநாள் வருவதையும் பார்த்தும் கூட அது மாலையில் கூம்புவதை விடுவதில்லை.

மனிதனின் ஒட்பம் அத்தகையதல்ல. ஒருமுறை பார்த்தால் உள்ளே அதைச் சேமித்து வைத்துக்கொண்டுவிடுவான். கதிர்போனாலும் இது நிரந்தர இருளல்ல என்னும் தெளிவு அவனது அறிவுக்கு உண்டு. இருக்கவேண்டும். ஆனால், வாழ்வின் இருளான சமயங்களில்? நம்பிக்கை இழந்துவிடுகிறானே! குமுறி அழுத எத்தனை இரவுகள், அஞ்சி நடுங்கிய எத்தனை இரவுகள், தற்கொலை செய்துகொண்டுவிடலாமா என்று மறுநாள் காலையைச் சந்திக்கக் கூசிய எத்தனை இரவுகள் - ஒளிமயமானதாக விடிந்திருக்கின்றன! "நானா அப்படி அஞ்சினேன்!" என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும்படி ஆகியிருக்கின்றதே. அன்று நாம் அஞ்சிய சூழ்நிலைகள் இன்று நகைக்கிடமாய்க் கூட ஆகிவிட்டிருக்கின்றனவே.

ஆனால், அதனை அடுத்தூர்வது அ·தொப்பதில் என்கிற ஒட்பம் இருப்பவன் இராமனைப்போலவே மலர்வதும் இல்லை, கூம்புவதும் இல்லை. ஏனெனில் அவனது அறிவு இவ்வுலகையே அரவணைத்ததாய் (உலகம் தழீஇயது), (பகல், இரவு; இன்பம், துன்பம்; பிறப்பு, இறப்பு போன்ற) உலகின் இருமைகளைப் புரிந்துகொண்டதாய் இருக்கிறது. அந்தப் புரிதலால் மனம் சமநிலை எய்தியிருக்கிறது. மெய்யான அறிவு இதுதான்.

இந்த வெளிச்சத்தில் (ஒட்பத்தில்!) மீண்டும் திருக்குறளின் பொருளைப் பார்ப்போம்:

(சூரியனின் ஒளி உலகனைத்தையும் தழுவியிருப்பதை அறியாது) மலர்வதையும் கூம்புவதையும் (தாமரைப்பூப் போலச்) செய்யாமலிருப்பதே அறிவுடையான் செயல். ஏனென்றால் அவனது ஒட்பம் (wisdom) உலகத்தின் (இருமைகள் கூடிய) இயல்பை முழுதுமாய் அரவணைத்துச் செல்வதாய் இருக்கிறது.

ஆரம்பத்தில் கேட்ட கேள்வி மீண்டும் இதோ - உங்களுக்கு (இத்தகைய) அறிவு இருக்கிறதா?

May 17, 2004

திருக்குறள் சொல்லும் தீக்கள் - 3



தலைகீழ் நெருப்பு
=============

இப்போ நாம பாக்கப் போறது தலைகீழ் நெருப்பு. ஹார்மோன் நெருப்பு.

சாதாரணமா நெருப்பு ரொம்பப் பக்கத்தில் போனால் சுடும், விலகினால் குளிரும் - அப்படி நெருப்பைத்தான் குறள் 691-ல் பார்த்தோம்.

ஐயா மெடிக்கல் ரெப். கொடைக்கானலுக்குப் போயிருக்கிறார் தொழில் நிமித்தமாய். வெய்யில் தாங்கமுடியாமல் ஏராளமான மக்கள் அங்கே வந்து குவிந்திருக்கிறார்கள். ஜோடி ஜோடியாகக் காதலர்களும் தான். இவர் டாக்டர் வீட்டு வாசலில் கனத்த பையோடும் அதைவிடக் கனத்த மனதோடும் உட்கார்ந்திருக்கிறார். இவருக்குக் கொடைக்கானல் பிடிக்கவில்லை.

அங்கிருந்து புறப்பட்டு இன்னொரு மருத்துவரைப் பார்க்கப் போகிற வழியில் படகுத்துறை. அங்கே பூங்கொத்துக்கள் போல ஆண்களும் பெண்களும். பெடலிங் படகில் அசட்டுத் தனமான ஜோக்குகளுக்கெல்லாமல் அடக்கமுடியாமல் சிரித்துக் கொண்டு, சாதாரண சா·ப்டியை தேவாமிருதம் போலச் சுவைத்துக்கொண்டு, மேலே ஒட்டிய சருகைத் தட்டிவிடுகிறாற்போலத் தொட்டுப்பார்த்துகொண்டு, திடீரென்று பேச மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, 'அடடா, அரைமணி நேரம் முடிந்து விடுமே, படகிலிருந்து இறங்கவேண்டுமே' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு - எத்தனை காதல் ஜோடிகள்!

நம்ம ஆளுக்கு மட்டும் கொடைக்கானல் சுடுகிறது. இவனுடைய 'அவள்' வேறொரு ஊரில் இருக்கிறாள். மரத்தைப் பார்த்தால், பூவைப் பார்த்தால், காற்று வீசினால், சூரியன் எழுந்தால், ஒரு நல்ல பானி-பூரி சாப்பிட்டால், வெளிர்நீலப் புடவையைப் பார்த்தால், மல்லிகையைப் பார்த்தால் - இவனுக்கு அவள் ஞாபகம் வந்துவிடுகிறது. இரவு நேரம் வந்தது. பகலைவிட எல்லோருக்கும் அதிகக் குளிராக இருக்க, இவனுக்கு இரவில்தான் அதிக வெம்மை.

படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு அவன் யோசிக்கிறான்: "இவளுக்கு மட்டும் இந்த அதிசய நெருப்பு எங்கிருந்து வந்தது? இவளை விட்டு அகன்று போனால் அது சுடுகிறதே. அதிக தூரம் நீங்கிப் போனால் அதிகம் சுடுகிறது. ஆனால் அவளருகில் போனால் வெம்மை அடங்கிவிடுகிறது. அணைத்தாலோ, சிலீரென்று குளிர்ச்சியாக இருக்கிறதே. எங்கே பெற்றாள் இந்த நெருப்பை?"

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்


(குறள்: 1104)

[தெறும் - சுடும்; குறுகுங்கால் - நெருங்கும்போது]

எல்லோரும் எப்போதோ ஒருமுறையாவது அனுபவித்த நெருப்புதானே இது.

May 16, 2004

திருக்குறள் சொல்லும் தீக்கள் - 2

அதிகாரத் தீயில் குளிர்காய
====================

நல்ல குளிர்ப் பிரதேசங்களிலே இருக்கறவங்களுக்குக் கணப்புன்னா என்னான்னு தெரியும். அங்கே வீடுகளிலேயே Fire Place இருக்கும். இப்பத்தான் எல்லாத்துக்குமே மின்சாரத்தில வந்துடுச்சே. முன்னாலே அதுக்குள்ளே மரத்துண்டுகளைப் போட்டு எரிப்பாங்க.

நம்ம எம்.ஜி.ஆர் ஒரு படத்துக்காக காஷ்மீர் போய்ட்டு ஒரு அதிசயத்தைப் பார்த்தார். அங்கே நெருப்புக்குக் கூட வாக்மன் பதிப்பு இருந்தது. அவர்கள் தம் ஆடைக்குள்ளேயே கணப்புச்சட்டியை வைத்துக்கொண்டு போவதைப் பார்த்து "மடியினில் நெருப்பைக் கட்டிக்கொண்டார் என்னும் பழமொழி இவர்தான் படைத்தாரோ" என்று பாடுவார். ஞாபகம் வந்திடுச்சா?

ஆக, குளிர்காயணும்னா நெருப்புக்கு எவ்வளவு பக்கத்திலே இருக்கமுடியுமோ அவ்வளவு பக்கத்திலே இருக்கணும். ஆனால் போய்த் தொடக்கூடாது - அவ்வளவு நெருக்கம் கூடாது. அதுக்காக வெலகி இருக்கறம்னு சொல்லிப்புட்டுத் தொலவுல போய்ட்டா வெப்பம் ஒறைக்காது - கிடுகிடுன்னு பல்லு தந்தியடிக்கும், ஒடம்பு நடுங்கும். குளிர் தாங்காது.

இதை நடைமுறை வாழ்க்கையிலே யோசிச்சுப் பாருங்க:

அரசன் கிட்டே நெருங்கிய வட்டத்திலே இருக்கறவங்களும் இதைப்போலத்தான் என்று சொல்றாரு வள்ளுவர். இப்போ அமைச்சர், டி.ஐ.ஜி என்று பெரும்பதவியில் உள்ளவர்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அவங்க பக்கத்திலே இருக்கற வரைக்கும் அவங்க செல்வாக்குலே குளிர்காயலாம். தள்ளிப்போனாப் போச்சு, ஒரு பய மதிக்கமாட்டான். அதுக்காக ஒரேயடியா ஒட்டிக்கிட்டீங்கன்னா, அடுத்த தேர்தல்லே ஆட்சி மாறின ஒடனே பொய்க்கேசு போட்டு முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க.

இன்னொரு வகைக் கஷ்டம் என்னன்னா, திடீர்னு யாராவது ஏதாவது கோள் சொல்லி ஐயாவுக்கு (அம்மாவுக்கும்தான்) உங்களைப் பிடிக்காமப் போயிடுச்சுன்னா, கையைத்தட்டி "யாரங்கே, இவனைக் கழுவில் ஏற்றுங்கள்!" அப்படீன்னுடுவாங்க. ஏன் கோள் சொல்றாங்க, பொறாமைதான். "உனக்கும் எனக்கும்தான் நெருக்கம், இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்", சர்த்தானா?

ஆகவே பதவியில், செல்வத்தில், செல்வாக்கில் மிகமிக உயரத்தில் இருப்பவர்களிடம் பழகும்போது - தீக்காய்வது போல - ரொம்ப விலகிவிடாமலும், அதே நேரத்திலும் ஒரேயடியாகப் போய் ஈஷிக்காமலும் பழகணுங்கறாரு வள்ளுவரு.

எப்படி?

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்


(குறள்: 691)

இன்னும் பலவகைத் தீக்களையும் சொல்லியிருக்காரு. ஒவ்வொண்ணாப் பார்ப்போம். தொடர்ந்து இங்கே வாங்க. வந்து உங்க கருத்தை எழுதுங்க.

May 12, 2004

சுவாமி இருக்கிறார்

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி இது.

அங்கே கோடைக்காலத்தில் தினமும் குடிநீர் நிரப்பிவைக்க ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் காவேரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து பெரிய சால்களில் நிரப்பிவைப்பார். சாலுக்குக் கீழே நல்ல மணல் பரப்புவார். நதியில் நீர் வறண்டுவிட்டாலும், மணற்படுகையில் ஊற்றுத் தோண்டி அதிலிருந்து தண்ணீர் கொண்டுவருவார். அந்தக் காலத்து ரெ·ப்ரிஜிரேஷன் டெக்னிக் அதுதான்.

நீரில் நறுமணம் வருவதற்காக வெட்டிவேர், விளாமிச்சை வேர் இவற்றையும் போட்டு வைப்பார். முந்தைய நாள் நீர் எஞ்சியிருந்தால் அதைக் கொட்டிவிட்டுப் பானையை ("ஓஹோ, 'சால்'னு சொன்னாப் பானையா?") நன்றாகக் கழுவிப் புதுநீர் நிரப்புவார். ஆசாமி கடுகடுப்பானவர்தான் என்றாலும் தன் வேலையைச் சரியாகவே செய்து வந்தார். அவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டவரும் கூட.

நிரப்புவது மட்டுமல்லாமல் கேட்பவர்களுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பதும் அவருடைய வேலையாய் இருந்தது.

அந்தக் கல்லூரியில் புதிதாக ஒரு தத்துவப் பேராசிரியர் வந்து சேர்ந்தார். பெயர் கள்ளிக்கோட்டை நாராயணசாமி ஐயர். ஒருநாள் அவர் தண்ணீர் கேட்க, இவர் எடுத்துக் கொடுத்தார். தண்ணீரில் ஏதோ கெட்ட நாற்றம் வருவதை உணர்ந்தார் கள்ளிக்கோட்டைக்காரர். "என்ன ஐயா, இதிலே ஏதோ நாற்றம் அடிக்கிறதே!" என்றார்.

"நான் என்ன செய்வேன், சுவாமி இருக்கிறார்" என்றார் தண்ணீர் கொடுப்பவர்.

தத்துவ ஆசிரியருக்கு இவர் சொன்னதன் தத்துவம் புரியவில்லை. ஊருக்குப் புதிதாயிற்றே. 'நான் ஒன்று கேட்டால் இந்த வயிற்றுவலிப் பேர்வழி ஏதோ சொல்கிறாரே. தண்ணீரைக் குறை சொன்னால் சுவாமி தண்டிப்பார்' என்று சொல்வது போலிருக்கிறதே என்று நினைத்தார். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. "என்ன ஐயா, தண்ணீர் நாறுகிறது என்றால் சுவாமி இருக்கிறார் என்கிறீர்களே. கொஞ்சம் நல்ல தண்ணீராகக் கொண்டுவந்து நிரப்பக் கூடாதா?" என்று குரலில் கடுமை தோன்றக் கேட்டார்.

"ஏதோ என்னால் ஆனதை நான் செய்கிறேன். சுவாமி இருக்கிறார். என்மேல் என்ன தப்பு?" என்றார் தண்ணீர் சேவைக்காரர் மீண்டும்.

தத்துவப் பேராசிரியருக்குக் கோபம் மேலே ஏறிக்கொண்டே போனது. மறுபடியும் கேட்டாலும், விடாமல் "சுவாமி இருக்கிறார்" என்பதே பதிலாக இருந்தது. தற்செயலாக உ.வே.சா. அங்கே போனார். வாக்குவாதம் முற்றுவதைக் கவனித்துவிட்டு "என்ன சமாச்சாரம்?" என்று கேட்டார்.

"இந்த ஆளை இப்பவே வேலைநீக்கம் செய்யவேண்டும். தண்ணீரில் கெட்ட நாற்றம் ஏன் வருகிறதென்று கேட்டால், சுவாமி இருக்கிறார் என்று பதில் சொல்கிறார்" என்றார் நாராயண சாமி ஐயர் உரத்த குரலில்.

உ.வே.சா.வுக்கு விஷயம் விளங்கிவிட்டது. "கோபித்துக்கொள்ளாதீர்கள். ஆற்றில் தண்ணீர் இல்லை. இவர் ஊற்றுப் போட்டுத் தண்ணீர் கொண்டுவருகிறார். ஊற்றின் அடியில் கும்பி இருக்கிறது. ஆகவேதான் தண்ணீரில் நாற்றம். இந்த ஊர் சுவாமியின் பெயர் கும்பேசுவரர். கும்பி என்பது அவர் பெயரைப் போல் ஒலிக்கிறது என்பதால் சுவாமி என்றே சொல்வது வழக்கம். 'கும்பியிருக்கிறது நான் என்ன செய்யமுடியும்' என்ற கருத்தில்தான் அவர் இப்படிச் சொன்னார். அவர் உங்களை நிந்திக்கவில்லை. தெய்வம் உங்களைத் தண்டிக்கவேண்டும் என்றும் கருதவில்லை" என்று விளக்கினார் உ.வே.சா.

நாராயணசாமி ஐயருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. தண்ணீர் கொடுப்பவரை ஏற இறங்கப் பார்த்தார். "அடப்பாவி! ஈசுவரனுடைய பெயரை இப்படியா உபயோகப்படுத்துவது? இதுதான் நீ சொன்னதன் அர்த்தமா?" என்று சொல்லிச் சிரித்தார்.

"சரிசரி, கும்பி இல்லாத இடமாகப் பார்த்து இனிமேல் நீர் மொண்டு வா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்கள். சரி, கும்பி என்றால் என்ன என்கிறீர்களா? இந்த இடத்தில் நாற்றமடிக்கும் சேறு என்று பொருள். தவிர 'வயிறு' என்றும் பொருளுண்டு. ("கும்பி எரியுது, குடல் கருகுது..." வசனம் கேட்டிருப்பீர்களே).

சுமார் 45 வருடங்களுக்கு முன்னால் நடந்த கதை இது என்று உ.வே.சாமிநாதையர் 1939-ல் சொல்கிறார். நூலின் பெயர்: புதியதும் பழையதும். (டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பெசன்ட் நகர், சென்னை 600090, தமிழ்நாடு, இந்தியா.)

சுவாமி இருக்கிறார் போங்கள்!

May 11, 2004

திருக்குறள் சொல்லும் தீக்கள் - 1

ஒரு வீட்டு வாசலில் ஒரு மரம் இருந்தது. அதன் கீழ் ஒரு துறவி
அமர்ந்திருந்தார். அந்த வீட்டில் ஒரு வேசி இருந்தாள். அவருக்கு வேசியின் மேல் மிகவும் அக்கறை. "ஐயோ, இவள் இந்தத் தீய தொழிலைச் செய்து இப்படி வீணாகப் போகிறாளே" என்று. ஒரு ஆசாமி உள்ளே போனதும் ஒரு சிறிய கல்லை எடுத்துப் போடுவார். அப்படிப் போட்டதில் மலைபோலக் குவிந்துவிட்டது.

வேசிக்கோ துறவியைப் பார்த்துப் பொறாமை. "ஆஹா, இவர் எப்போதும் தெய்வத்தை
நினைத்துத் தியானத்திலேயே இருக்கிறாரே, நாம் இந்தப் பாவத் தொழிலைச் செய்து கொண்டு இருக்கிறோமே" என்று எப்போதும் நினைத்து வருந்தியபடி இருந்தாள்.

ஒரு நாள் அவள் இறந்துபோனாள். பார்த்தால் தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் அவளை அழைத்துப் போவது துறவிக்குத் தெரிந்தது.

துறவிக்கு ஒரே ஆச்சரியம்...

சிறிது நாட்களில் துறவி இறந்தார். அவரை யம தூதர்கள் வந்து நரகத்துக்கு அழைத்துப் போனார்கள். துறவிக்கு வந்ததே கோபம். "என்ன இது அநியாயம். நான் எப்போதும் இறை நினைவாகவே இருந்தேன். எனக்கு நரகம், அதோ கல்குவியல் அளவுக்கு ஆண்களோடு சுகித்த வேசிக்குப் புஷ்பக விமானமா?" என்றார்.

அவர்கள் கூறினர் "ஐயா! அவள் இறைவனைத் தியானம் செய்யமுடியவில்லையே
என்று இரவும் பகலும் எண்ணியபடியே தன் தொழிலைச் செய்தாள். நீங்களோ இந்தக் கல்குவியல் அளவுக்கு அவளது பாவத்தையே நினைத்துப் பாவம் சம்பாதித்துக் கொண்டீர்கள்" என்று.

இது ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது.

தீ தொட்டால்தான் சுடும்.ஆனால் தீமை இருக்குதே, அது நெனச்சாலே தீங்கு வெளவிக்கும்.

திருவள்ளுவர் ரெண்டு மூணு தீயைப் பத்திச் சொல்றாரு. இதோ இந்தத் தீயைப்
பாருங்க:

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்


இதையே இலக்கணம் கொஞ்சமும் கெடாமல்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயென அஞ்சப் படும்

என்று சொல்லியிருக்கலாம். அதாவது "நெருப்பைப் போல அதுக்குப்
பயப்படணும்"னு. அப்படிச் சொல்லலையே! தீயைவிட அதிகம் பயப்படணும்னாரு - ஏன்?

'நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடுமா?' என்பார்கள். கையைக்காலை வச்சுக்கிட்டுச் சும்மா இல்லாமல் போய் அதைத் தொட்டால்தான் அது சுடும், எரிக்கும், காயப்படுத்தும், சாம்பலாகவும் ஆக்கும். அதைச் சரியாகக் கையாண்டால் நல்லதுதான் செய்யும்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் கதை இந்தத் திருக்குறளைத்தான் நமக்குச் சொல்லிச்சு.

வேறு என்ன வகைத் தீக்களை வள்ளுவர் சொன்னார்...?

சக்தி துதி

சக்திக் கனல்தேக்கிச் சக்திக் கவிதூக்கி
சக்திக்கே நாமடிமை பூண்டதனால் - சக்திஓம்
சக்தியென ஆர்த்திடுவோம் சக்திஅருள் வார்த்திடுவாள்
சக்தியின் தாளே சரண்.


என்று பராசக்தியின் தாள் வணங்கி இந்த வலைப்பூவுள் கால்வைக்கத் துணிகிறேன். என் எழுத்து இவ்வையத்துக்குப் பொருளும், பயனும், வலிமையும் சேர்ப்பதாக இருக்கட்டும். மனித நேயம் பெருக்கட்டும்.

இவ்வையகம் முற்றும் நல்லின்பத்தில் வாழ்க!